தொல்காப்பியம் 1 · எழுத்து 1.1

Section எழுத்ததிகாரம் / 1. நூல் மரபுPoet தொல்காப்பியர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1

பொருள் · Meaning in TamilAI

எழுத்து என்று சிறப்பாகச் சொல்லப்படுபவை அகரம் முதல் னகரம் ஈறாக உள்ள முப்பது என்பர்; சார்ந்து வரும் மரபுடைய மூன்று எழுத்துகளைச் சேர்க்காமல் எண்ணும்போது இது. அதாவது பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்யும்.

இளம்பூரணர்

இவரும் அகரம் முதல் னகரம் ஈறாகிய முப்பதையே எழுத்து எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவன என்றும், சார்ந்து வரும் மூன்றும் இவற்றுக்கு வேறாக எண்ணப்படுவன என்றும் பொருள் கொள்வார்.

நச்சினார்க்கினியர்

சார்பெழுத்து மூன்றையும் சேர்த்தால் முப்பத்து மூன்று ஆகும் என்று விளக்குகிறார். அகரத்தில் தொடங்குவது வடமொழிக்கும் பொதுவானது; னகரத்தில் முடிப்பதே இவை தமிழ் எழுத்துகள் என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What are called letters
  2. beginning with a
  3. and ending with ṉ are thirty, they say,
  4. apart from the three that by tradition occur dependently.

What the poem says

The opening rule of the Eḻuttatikāram (the book on letters) gives the basic inventory: there are thirty letters (eḻuttu), from a to ṉ, that is, the twelve vowels and the eighteen consonants. Besides these there are three cārpeḻuttu, "dependent letters", which only occur in certain surroundings; they are named in the next nūṟpā.

Nacciṉārkkiṉiyar notes that "what are called letters" singles out these thirty as letters in the full sense; counting the three dependent ones gives thirty-three. He also remarks that beginning with a is shared with Sanskrit, but ending the list with ṉ marks these out as the letters of Tamil.

உரை · Commentary

நச்சினார்க்கினியர்

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் எழுத்திலக்கணம் உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்தை உணர்த்திய அதிகாரம் என விரிக்க. அதிகாரம்—முறைமை.

எழுத்து உணர்த்துமிடத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோவெனின் எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினார் என்க.

எட்டுவகைய என்பார் கூறுமாறு :—எழுத்து இனைத்தென்றலும் இன்ன பெயரின என்றலும் இன்ன முறையின என்றலும் இன்ன அளவின என்றலும் இன்ன பிறப்பின என்றலும் இன்ன புணர்ச்சியின என்றலும் இன்ன வடிவின என்றலும் இன்ன தன்மையின என்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும்.

எழுத்து இனைத்தென்றலைத் தொகை வகை விரியான் உணர்க. முப்பத்து மூன்று என்பது தொகை. உயிர் பன்னிரண்டும் உடம்பு பதினெட்டுஞ் சார்பிற் றோற்றம் மூன்றும் அதன் வகை. அளபெடையேழும் உயிர்மெய் இருநூற்றொருபத்தாறும் அவற்றோடு கூட்டி இருநூற்றைம்பத்தாறெனல் விரி.

இனி எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் இச்சூத்திரத்தாற் பெற்றாம். வகை ‘ஔகார இறுவாய்’ (எழு-௮) என்பதனானும் ‘னகார இறுவாய்’ (எழு - ௯) என்பதனானும் ‘அவைதாம், குற்றியலிகரங் குற்றியலுகரம்’ (எழு - ௨) என்பதனானும் பெற்றாம். விரி ‘குன்றிசை மொழிவயின்’ (எழு - ௪௧) என்பதனானும் ‘புள்ளியில்லா’ (எழு - ௧௭) என்பதனானும் பெற்றாம்.

அளவு ‘அவற்றுள், அ இ உ’ (எழு - ௩) என்பதனானும் ‘ஆ ஈ ஊ’ (எழு-௪) என்பதனானும் ‘மெய்யின் அளபே’ (எழு-௧௧) என்பதனானும் ‘அவ்வியல் நிலையும்’ (எழு - ௧௨) என்பதனானும் பெற்றாம்.

பிறப்பு பிறப்பியலுட் பெற்றாம்.

புணர்ச்சி ‘உயிரிறு சொல்முன்’ (எழு - ௧௦௭) என்பதனானும் ‘அவற்றுள், நிறுத்த சொல்லின்’ (எழு - ௧௦௮) என்பதனானும் பிறவாற்றானும் பெற்றாம்.

இனி, எட்டிறந்த பல்வகைய என்பார் கூறுமாறு :—எழுத்துக்களது குறைவுங் கூட்டமும் பிரிவும் மயக்கமும் மொழியாக்கமும் நிலையும் இனமும் ஒன்று பலவாதலுந் திரிவதன்றிரிபு அது என்றலும் பிறிதென்றலும் அதுவும் பிறிதுமென்றலும் நிலையிற்றென்றலும் நிலையாதென்றலும் நிலையிற்றும் நிலையாதும் என்றலும் இன்னோரன்ன பலவுமாம்.

குறைவு ‘அரையளபு குறுகல்’ (எழு-௧௩) ‘ஓரளபாகும்’ (எழு-௫௮) என்பனவற்றாற் பெற்றாம்.

கூட்டம் ‘மெய்யோடியையினும்’ (எழு-௧௦) ‘புள்ளியில்லா’ (எழு-௧௭) என்பனவற்றாற் பெற்றாம்.

பிரிவு ‘மெய்யுயிர் நீங்கின்’ (எழு-௧௩௯) என்பதனாற் பெற்றாம்.

மயக்கம் ‘டறலள’ (எழு - ௨௩) என்பது முதலாக ‘மெய்ந்நிலை சுட்டின்’ (எழு - ௩௦) என்பதீறாகக் கிடந்தனவற்றாற் பெற்றாம்.

மொழியாக்கம் ‘ஓரெழுத் தொருமொழி’ (எழு - ௪௫) என்பதனாற் பெற்றாம், அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின்.

நிலை ‘பன்னீருயிரும்’ (எழு-௫௯) ‘உயிர்மெய்யல்லன’ (எழு-௬௦) ‘உயிர் ஔ’ (எழு-௬௯) ‘ஞணநமன’ (எழு-௭௮) என்பன. இவற்றான் மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈறாமெழுத்தும் பெற்றாம்.

இனம் ‘வல்லெழுத்தென்ப’ (எழு-௧௯) ‘மெல்லெழுத்தென்ப’ (எழு - ௨௦) ‘இடையெழுத்தென்ப’ (எழு-௨௧) ‘ஔகார இறுவாய்’ (எழு - ௮) ‘னகார இறுவாய்’ (எழு - ௯) என்பனவற்றாற் பெற்றாம். இவற்றானே எழுத்துக்கள் உருவாதலும் பெற்றாம். இவ்வுருவாகிய ஓசைக்கு ஆசிரியர் வடிவு கூறாமை உணர்க; இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே பெரும் பான்மையும் வடிவு கூறுமாறு உணர்க

ஒன்று பலவாதல் ‘எழுத்தோரன்ன’ (எழு - ௧௪௧) என்பதனாற் பெற்றாம்.

திரிந்ததன் றிரிபது என்றல் ‘தகரம் வருவழி’ (எழு - ௩௯௯) என்பதனானும் பிறாண்டும் பெற்றாம்.

பிறிதென்றல் ‘மகர இறுதி’ (எழு - ௩௧௦) ‘னகார ஈறு’ (எழு - ௩௩௨) என்பனவற்றாற் பெற்றாம்.

அதுவும் பிறிதுமென்றல் ‘ஆறனுருபின் அகரக் கிளவி’ (எழு - ௧௧௫) என்பதனாற் பெற்றாம்.

‘நிலையிற் றென்றல் நிறுத்த சொல்லின் ஈறாகு’ (எழு - ௧௦௮) என்பதனாற் பெற்றாம்.

நிலையாதென்றல் நிலைமொழியது ஈற்றுக்கண்ணின்றும் வருமொழியது முதற்கண்ணின்றும் புணர்ச்சி தம்முள் இலவாதல். அது ‘மருவின் தொகுதி’ (எழு - ௧௧௧) என்பதனாற் பெற்றாம்.

நிலையிற்றும் நிலையாதும் என்றல் ‘குறியதன் முன்னரும்’ (எழு - ௨௨௬) என்பதனாற் கூறிய, அகரம் ‘இரா வென் கிளவிக் ககரமில்லை’ (எழு - ௨௨௭) என்பதனாற் பெற்றாம்.

இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையும் என இருவகைய.

அவற்றுட் கருவி புறப்புறக்கருவியும் புறக்கருவியும் அகப்புறக் கருவியும் அகக் கருவியும் என நால்வகைத்து. நூன்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி. மொழிமரபு புறக்கருவி. புணரியல் அகப்புறக் கருவி. ‘எகர ஒகரம் பெயர்க் கீறாகா’ (எழு - ௨௭௨) என்றாற் போல்வன அகக்கருவி.

இனிச் செய்கையும் புறப்புறச் செய்கையும் புறச் செய்கையும் அகப்புறச் செய்கையும் அகச்செய்கையுமென நால்வகைத்து. ‘எல்லா மொழிக்கும் உயிர் வருவழியே’ (எழு - ௧௪௦) என்றாற் போல்வன புறப்புறச் செய்கை. ‘லன எனவரூஉம் புள்ளி முன்னர்’ (எழு-௧௪௯) என்றாற்போல்வன புறச்செய்கை. ‘உகரமொடு புணரும் புள்ளியிறுதி (எழு - ௧௬௩) என்றாற் போல்வன அகப்புறச் செய்கை. தொகைமரபு முதலிய ஓத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லாம் அகச்செய்கை. இவ்விகற்பமெல்லாம் தொகையாக உணர்க.

இவ்வோத்து என்னுதலிற்றோ எனின், அதுவும் அதன் பெயருரைப்பவே அடங்கும்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், இத் தொல்காப்பியமென்னும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின் நூன்மரபு என்னும் பெயர்த்தாயிற்று.

நூலென்றது நூல்போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராம். அவ்வொப்பாயவாறு என்னையெனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளையெல்லாங் கைவன் மகடூஉத் தூய்மையும் நுண்மையுமுடையவாக ஓரிழைப் படுத்தினாற்போல ‘வினையி னீங்கி விளங்கிய அறிவ” (மரபியல்-௯௧) னாலே வழூக் களைந்து எஃகிய இலக்கணங்களையெல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின்றாகவும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங் குற்றமும் இன்றி ஈரைந் தழகுபெற, முப்பத்திரண்டு தந்திர உத்தியோடு புணரவும்,

‘ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்’ (செய் - ௧௬௬)

ஒருநெறிப்படப் புணர்க்கப்படூஉந் தன்மையுடைமையான் என்க. மரபு இலக்கணம், முறைமை, தன்மை என்பன ஒருபொருட் கிளவி.

ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றதிகாரத்தினையும் அன்றே? இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கணமாயவாறென்னையெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்துமூன்றனைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகைகோடலில் தொகை வேறாம். அளவு செய்யுளியற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்குங் கூறிய மாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு. ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளவு கோடற்கு ஈண்டைக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது ‘அளபிறந் துயிர்த்தலும் (எழு-௩௩) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியுமாற்றான் உணர்க. இன்னுங் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ்வதிகாரத்திற்கே உரியனவாகக் கூறியன, ‘அம்மூவாறும்’ (எழு-௨௨) என்னுஞ் சூத்திரம் முதலியனவற்றான் எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணங் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப்பியம் என்னும் பிண்டத்தை. இவ்வோத்திலக்கணங்கள் எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் அளவுங் குறைவுங் கூட்டமும் இனமும் மயக்கமும் ஆம். ஏனைய இவ்வதிகாரத்துள் ஏனையோத்துக்களுள் உணர்த்துப.

அற்றேல் அஃதாக, இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : எழுத்தெனப் படுப - எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரமுதல் னகரஇறுவாய் முப்பஃதென்ப - அகரம் முதல் னகாரஈறாகக் கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர், சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே - சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் அல்லாத இடத்து என்றவாறு.

எனவே, அம்மூன்றுங் கூடியவழி முப்பத்து மூன்றென்ப. அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஔ-க்-ங்-ச்-ஞ்-ட்-ண்-த்-ந்-ப்-ம்-ய்-ர்-ல்-வ்-ழ்-ள்-ற்-ன் எனவரும். எனப்படுப என்று சிறப்பித்துணர்த்துதலான் அளபெடையும் உயிர்மெய்யும் இத்துணைச் சிறப்பில; ஓசையுணர்வார்க்குக் கருவியாகிய வரிவடிவுஞ்சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும்.

அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றாரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார்.

படுப, படுவ. படுபவென்பது படுத்தலோசையால் தொழிற்பெயராகக் கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு நிற்றற்குத் தம்முள் ஒத்த உரிமையவேனும் எழுத்தெனப் படுபவெனத் தூக்கற்று நிற்குஞ் சொற்சீரடிக்குப் படுப என்பது இன்னோசைத்தாய் நிற்றலின் ஈண்டுப் படுப வென்றே பாடம் ஓதுக. இஃது அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல்.

அகர னகர மெனவே பெயருங் கூறினார்.

எழுத்துக்கட்கெல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் ‘மெய்யினியக்கம் அகரமொடு சிவணும்’ (எழு - ௪௬) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்துஞ் சிறப்பான் னகரம் பின் வைத்தார். இனி எழுத்துக்கட்குக் கிடக்கைமுறை ஆயினவாறு கூறுதும்.

குற்றெழுத்துக்களை முன்னாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூறவேண்டுதலின். அன்றி இரண்டை முற்கூறினாலோவெனின், ஆகாது:ஒன்று நின்று அதனோடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டென்பதொன்று இன்றாதலின். இதனான் ஒன்றுதான் பல கூடியே எண் விரிந்ததென்று உணர்க.

இனி, அகரத்தின் பின்னர் இகரம், எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும் ‘அ-இ-உ-அம் மூன்றுஞ் சுட்டு’ (எழு - ௩௧) எனச் சுட்டுப் பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி அவை ஐம்பாற் கண்ணும் பெரும்பான்மை வருமாறு உணர்க. எகரம் அதன்பின் வைத்தார், அகர இகரங்களோடு பிறப்பு ஒப்புமைபற்றி. ஐகார ஔகாரங்கட்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும் பிறப்பு ஒப்புமைபற்றி ஏகார ஓகாரங்களின் பின்னர் ஐகார ஔகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடு கூடி நின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழியாகாத சிறப்பின்மை நோக்கி ஐகாரத்தின்பின் வைத்தார். அ-இ-உ-எ என்னும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன் என மெய்யோடு கூடாமல் தாம் இடைச்சொல்லாய் நின்றாயினும் மேல் வரும் பெயர்களோடு கூடிச் சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும். ஒகரம் மெய்யோடு கூடியே தன்பொருள் உணர்த்துவதல்லது தானாகப் பொருளுணர்த்தாதென்று உணர்க. இன்னும் அ-ஆ-உ-ஊ-எ-ஏ-ஒ-ஓ-ஔ என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ-ஈ-ஐ தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தோடு குற்றெழுத்திற்கு ஓசை இயையுமாற்றானும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார ஈகார ஊகாரங்களாதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுட் பெறுதும். இம்முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க.

இனிக் ககார ஙகாரமும் சகார ஞகாரமும் டகார ணகாரமும் தகார நகாரமும் பகார மகாரமும் தமக்குப் பிறப்புஞ் செய்கையும் ஒத்தலின் வல்லொற்றிடையே மெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதல்நாவும் முதலண்ணமும் இடைநாவும் இடையண்ணமும் நுனிநாவும் நுனியண்ணமும் இதழியைதலுமாகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமைநோக்கி அவ்வெழுத்துக்களைக் க-ச-ட-த-ப-ங-ஞ-ண-ந-ம என இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமையானும் னகாரம் றகாரமாய்த் திரிதலானும் றகாரமும் னகாரமுஞ் சேரவைத்தார். இவை தமிழெழுத்தென்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி இடையெழுத்துக்களில் யகாரம் முன்வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிடற்றுப்பிறந்த வளி அண்ணங் கண்ணுற்று அடையப் பிறத்தலின். ரகாரம் அதனோடு பிறப்பு ஒவ்வாதேனுஞ் செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்மிற் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும் கல் வலிது சொல் வலிது என்றாற்போலத் தம்மிற் சேர்ந்துவருஞ் சொற்கள் பெரும்பான்மையென்பது பற்றி லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபிலவேனும் ‘இடையெழுத் தென்ப யரலவழள’ (எழு - ௨௧) என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேர வைத்தார் போலும்.

அகரம் உயிரகரமும் உயிர்மெய் அகரமும் என இரண்டு, இஃது ஏனை உயிர்கட்கும் ஒக்கும். எனவே, ஓருயிர் பதினெட்டாயிற்று.

இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார். அதனை உருவென்றே கோடும். அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும், இடையெறியப் படுதலானும், செவிக்கட் சென்று உறுதலானும் இன்பதுன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானும் தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப் பிறக்கும் என்றமையானும் உருவேயாம். அருவேயாயின் இவ்விடத்திற்கூறியன இன்மை உணர்க. அல்லதூஉம், வன்மை மென்மை இடைமை என்று ஓதினமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்த லென்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்றதென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினாம்.

இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூறாராயினார், அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு உணர்த்துதற்கு அரிதென்பது கருதி. அவ்வடிவு ஆராயுமிடத்துப் பெற்றவடிவே தமக்கு வடிவாம், குழலகத்திற் கூறிற் குழல் வடிவும் குடத்தகத்திற் கூறிற் குடவடிவும் வெள்ளிடையிற் கூறின் எல்லாத் திசையும் நீர்த்தரங்கமும் போல.

‘எல்லா மெய்யும் உருவுரு வாகி’ (எழு - ௧௭) எனவும் ‘உட்பெறு புள்ளி யுருவா கும்மே’ (எழு - ௧௪) எனவும் ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’ (எழு - ௧௫) எனவுஞ் சிறுபான்மை வடிவுங் கூறுவர். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றே உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறுவடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற் கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார், உயிர்க்கு வடிவின்மையின். ‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’ (எழு - ௧௬) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறினார்.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuttu eṉappaṭupa
akaram mutal
ṉakara iṟuvāy muppaḵtu eṉpa
cārntu varal marapiṉ mūṉṟu alaṅkaṭaiyē.