கம்பராமாயணம் 3730 · ஆரணிய 10.2

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஐ ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி , அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார் ; கதிரவனும் வானின் நாப்பண் வந்து உற்றான் ;
எய்யும் சிலை கை இருவரும் சென்று , இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைத்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தின்கண் உற்றார் .

பொருள் · Meaning in Tamil

ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி - இருபத்தைந்து என்ற எண்ணிக்கை எட்டிய யோசனை தூரத்தின் இரு மடங்கு (அதாவது ஐம்பது; அடவி புடை உடுத்த வையம் திரிந்தார் - காடுகளால் பக்கங்களில் சூழப்பட்ட நிலப் பகுதியில் இராம இலக்குவர்கள் அலைந்தார்கள்; கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் - சூரியன் (வானின்) நடுப் பகுதியை வந்துசேர்ந்தது; எய்யும் சிலைக் கை இருவரும் சென்று - எய்யும் கணை பொருந்திய வில்லை ஏந்திய கைகளை உடைய இராமலக்குவர் இருவரும் (மேலே சென்று); இருந்தே நீட்டி - தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு கைகளை மட்டும் நீட்டி; எவ் உயிரும் கையின் வளைத்து - தன் எல்லைக்குள் சிக்கும் எல்லா உயிரினங்களையும் வளைத்துப் பிடித்து; வயிற்றின் அடக்கும் - தன் வயிற்றுக்குள்ளே செறித்துச் செரித்துவிடுகின்ற; கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார் - கவந்தன் வாழும் கானகத்தைக் கண்டார்கள்.

ஐம்பது யோசனை தூரத்தைக் கடந்த இராமலக்குவர்கள் ஒரு நாள் நண்பகற் பொழுதில் கவந்தன் வாழும் கானகத்தைக் கண்டார்கள் என்பது செய்யுளின் திரண்ட கருத்து. 'இருவரும்.... திரிந்தார்... கண்ணுற்றார்' எனக் கூட்டுக. இருவரும் என்ற எழுவாய் இடையே அமைந்து இருபாலும் உள்ள வினைமுற்றுக்களைக் கொண்டு முடிந்தது.

கபந்தம் (அல்லது கவந்தம்) என்ற வட சொல்லுக்கு முதலில் வாயகன்ற மிடா (பீப்பாய்) என்பது பொருள். மிடாவுக்கு வாய் உண்டு; உள்ளிடம் உண்டு. இதே கருத்துக்குரிய வடிவம் பெற்றவன் - வாயும்வயிறுமாக, வயிற்றிலே வாயனாக இருப்பவன். இந்திரனின் வச்சிராயுதம் தாக்கியதால் தலை வயிற்றுள் போய் வயிற்றில் வாயனாக உருமாறிய அரக்கனுக்கு கவந்தன் என்பது பெயராயிற்று. இராமலக்குவரின் வாளால் பிளக்கப்படும் வரை இவ்வடிவினனாயிருக்குமாறு சபிக்கப்பட்டவன், இவன்.

கவந்தன் செய்தி : தனு என்னும் பெயருடைய கந்தருவன் தூலசிரசு என்ற முனிவரின் வடிவத்தை எள்ளினான். சினமுற்ற முனிவரின் சாபத்தால் கவந்தன் ஆயினான். இந்திரனின் வச்சிராயுதம் தாக்கியதால் தலை வயிற்றுள் ஆழ்ந்தது. இவன் கரங்கள் ஒரு யோசனை நீளம் கொண்டனவாம். தன் கரங்களுக்கு உட்பட்ட எதனையும் கவர்ந்து, வயிற்றுள் திணித்து உணவாகக் கொள்வது இவன் வாழ்வு.

ஐ ஐந்து அடுத்த இரட்டி : இருபத்தைந்தின் இருமடங்கு; ஐம்பது. நான்கு குரோசம் கொண்டது ஒரு யோசனை. இரண்டரை மைல் ஒரு குரோசம். எனவே, யோசனை என்பது பத்து மைல் தொலைவு ஆகிறது. காதம் என்பதும் சுமார் பத்து மைல் தொலைவு என்பர். யோசனையைக் கூப்பிடு தூரம் என்றும் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Twice five times five leagues, through land girdled by forest,
  2. they wandered; the sun too came to the middle of the sky;
  3. the two, with bows that shoot in their hands, went on, and of one who, staying where he sits, stretches out
  4. and curls every living thing into his arms and packs it into his belly, Kavantaṉ, they saw the forest.

What the poem says

After travelling fifty leagues, the brothers reach at midday the forest where Kavantaṉ lives. Kavantaṉ is a monster with no head, his mouth and eyes set in his belly. He never moves from his place; instead his arms, each a league long, sweep in every creature within reach and push it into his mouth.

Once a celestial being, he mocked a sage's appearance and was cursed with this shape, and Indra's thunderbolt drove his head down into his body. He is to stay this way until Irāmaṉ and Ilakkuvaṉ cut him free.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ai aintu aṭutta yōcaṉaiyiṉ iraṭṭi, aṭavi puṭaipaṭutta
vaiyam tirintār; katiravaṉum vāṉiṉ nāppaṇ vantuṟṟāṉ;
eyyum cilaik kai iruvarum ceṉṟu, iruntē nīṭṭi ev uyirum
kaiyiṉ vaḷaittu vayiṟṟiṉ aṭakkum kavantaṉ vaṉattaik kaṇṇuṟṟār.