தொல்காப்பியம் 1091 · பொருள் 4.6

Section பொருளதிகாரம் / 4. கற்பியல்Poet தொல்காப்பியர்Lines 43

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
5
10
15
20
25
30
35
40

பொருள் · Meaning in TamilAI

தலைவன் உள்ளத்தை நன்கு அறிந்தவள் என்பதால் அவனை உயர்த்திக் கூறுதலும் அவன் பண்பை உறுதியாக நிறுத்திக் கூறுதலும், உரிமை தந்த கணவனிடம் பெருமை குன்றாத அன்பு, பிரிவில் தனிமை பெரிதாதலால் பெருகும் காம மிகுதி, இன்பமும் துன்பமும் சேர்ந்து வரும் நிலை, மகன் பிறந்து நெய்யாடிய பின் தன்னை விரும்பி வந்த கணவனை நெஞ்சு புண்படுமாறு விலக்கும் இளிவந்த நிலை, புதிய பரத்தையரின் மென்மையை நாடிச் சென்ற கணவனிடம் தன் தனிமையைக் காட்டி, அவனிடம் சென்ற நெஞ்சை மீட்டு, அவர்களை முன்னிறுத்தி மறுக்கும் அன்பு நிலை, "என் தங்கையருக்குச் சொல்" என வணங்கி இரத்தல், போகாதவனைப் "போ" என்றல், காமக்கிழத்தி தன் மகனைத் தழுவி விளையாடிய முடிவு, அறம் விரும்பும் உள்ளத்தோடு தன் வருகை தெரியாமல் பின்னே நிற்கும் கணவனின் ஊடல் தீர்க்கும் இடம், "மக்கள் தந்தையரை ஒப்பர்" என மகனைப் பழித்தல், புகழ் விரும்புவோர் சொல்லோடு இணங்கிப் பிரிவுணர்வு நீங்கிய தகுதி, அடிமேல் விழுந்த கணவனிடம் "உன் காதல் தங்கையர் கண்டால் நன்று" என்றல், பரத்தை மகனை நினைத்தபோது சினத்தல், பழைய சூளுரையை எடுத்துக் கூறுதல், காமக்கிழத்தியரின் அழகைப் புகழ்ந்து தீமையில் முடித்தல், கணவனின் கொடுமை ஒழுக்கத்தில் கற்பு குன்றாமல் சினத்தல், மகிழ்தல், விலக்குதல், விரும்புதல் ஆகிய பல நிலைகள், வாயில்களுக்குக் கூறும் மறுமொழிகள் ஆகிய இவற்றில் தலைவி பேசுதல் அவளுக்கு உரியது.

இளம்பூரணர்

இவற்றுள் பல பரத்தைமை காரணமாக நிகழும் ஊடல் நிலைகள் என விளக்குவார்; "நிலத்தினும் பெரிதே" என்னும் குறுந்தொகைப் பாடலை உறுதியான அன்புக்குச் சான்றாகக் காட்டுவார்.

நச்சினார்க்கினியர்

ஏற்றல், நிறுத்தல் என்பவற்றை வேள்விச் சடங்கில் மனைவியர் நிலையோடு இணைப்பார்; "கொடியோர்" என்பதைப் பாணர் முதலிய வாயில்கள் எனக் கொள்வார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since she knows his mind thoroughly,
  2. in extolling him and in holding firm;
  3. toward the hero who gave her her rights,
  4. in a love that does not swerve from dignity;
  5. since the wife's loneliness without her husband is great,
  6. the excess of love in which distress has grown;
  7. and where joy and pain have come together;
  8. when the soft-headed child has appeared, the lovely ghee bath,
  9. to the husband who desired her, wounding his heart,
  10. the state of slight in which she kept him from closeness;
  11. with eager heart, for the softness of new women,
  12. to the husband who went off, showing her great loneliness,
  13. drawing back her heart that had gone out to him, making it small,
  14. setting them before her and refusing him, in the part that is love;
  15. bowing to the husband of the conduct that stayed away,
  16. in begging him, 'Tell it to my younger sisters';
  17. and sending him off, 'Go', when he does not go;
  18. when the concubine, embracing her son,
  19. at the end of their happy play;
  20. when, in a noble act, he appears there,
  21. with a heart set on virtue, so that she knows not of his coming,
  22. standing behind her, at the point where her sulk must be dispelled;
  23. since sons resemble their fathers,
  24. pressing hard on him by blaming the son of endless worth;
  25. 'the cruelty of the cruel will burn', not slackening,
  26. together with the words of those who prize good fame,
  27. in the fitness that has left all division;
  28. wishing that his cruel conduct be borne,
  29. to the husband fallen at her feet, pressing close,
  30. 'It would be fine if your loving younger sisters saw this',
  31. in the manner full of feeling;
  32. the finely adorned son whom the mothers cherished,
  33. when the deceitful courtesan thought of him;
  34. from her own excess and from his estrangement
  35. in raising the grievous old oath;
  36. in the matter that, praising the beauty of the concubines,
  37. ends in harm;
  38. what is proper for the friend in his cruel conduct;
  39. not swerving from chastity of flawless excellence,
  40. being angry and being glad, keeping apart and desiring,
  41. in the many states that come there;
  42. together with the ways that come through the go-betweens,
  43. the heroine's speaking is her due, they say.

What the poem says

The counterpart of the previous nūṟpā: the occasions on which the heroine (kiḻavōḷ) speaks in wedded life.

Because she knows her husband's mind well, she may extol him (ēṟṟal) and firmly stand by his good qualities (niṟuttal); Iḷampūraṇar cites Naṟṟiṇai 1 and Kuṟuntokai 3, "greater than the earth, higher than the sky", for her steady love. She speaks of the excess of love when parted, and where joy and pain mix. Many items concern ūṭal, sulking at his visits to courtesans: after the birth of a son (kayantalai, "the soft-headed one"; Nacciṉārkkiṉiyar takes it as a son like an elephant calf), she rebuffs the husband who wants her after her ghee bath, feeling slighted; she draws back her heart from the husband who left for "new women", imagining them before her and refusing him, which Iḷampūraṇar calls love (īram) under the refusal; she bows ironically and says "tell it to my younger sisters", meaning the courtesans; she tells him "go" when he will not; she blames their son, because "sons resemble their fathers"; she tells him, fallen at her feet, that it would be fine if "your loving younger sisters" saw it.

Further items: the concubine playing with her son; her anger when the courtesan fondles the son; recalling his old oath, which will harm him if broken; ironic praise of the concubines' beauty. Finally, in his straying she may be angry or glad, keep him off or desire him, toward the friend and the go-betweens, without ever leaving kaṟpu. Nacciṉārkkiṉiyar reads ēṟṟal and niṟuttal in terms of wives in Vedic sacrifice and takes the "cruel ones" as the bards and other go-betweens; we follow Iḷampūraṇar in the lines.

உரை · Commentary

இளம்பூரணர்

என் - எனின், கற்பின்கண் தலைவிகூற்று நிகழும் இடம் தொகுத் துணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஏற்றல் முதலாக வாயிலின் வருஉம் வகையொடு கூடத் தலைவி கூறல் உரியதாகும் என்றவாறு.

அவனறி வாற்ற அறியு மாகலின் ஏற்றற் கண்ணும் என்பது—தலைவனது நினைவைத் தலைவி மிக அறியுமாகலின் அவனை யுயர்த்துக் கூறுதற்கண்ணும் தலைவி கூற்று நிகழும்,

“நின்ற சொல்லர்….. செய்பறி யலரே.” (நற்றிணை. ௧)

என வரும்.

நிறுத்தற் கண்ணும் என்பது- தலைவனது பண்பினைத் தோழி கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறுதற்கண்ணும் என்றவாறு.

“முடவுமுதிர்…..இனியனால் எமக்கே” (அகம். ௩௫௨)

என வரும்.

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் என்பது—தலைவிக்கு உரிமையைக் கொடுத்த கிழவோன்மாட்டுப் பெருமையிற் றிரியா அன்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே’ (குறுந். ௩)

என வரும்.

கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் என்பது—தலைவனைத் தலைவி நீங்கித் தனிமையுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

‘நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் தணந்தனி ராயின்எம் இல்லுய்த்துக் கொடுமோ அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவில் நடுங்கஞர் எவ்வங் களைந்த எம்மே” (குறுந் ௩௫௪)

எனவும்,

“என்கைக் கொண்டு தன் கண் ஒற்றியுந் தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும் அன்னை போல இனிய கூறியும் கள்வர் போலக் கொடியன் மாதோ…… கோடுயர் பிறங்கல் மலைகிழவோனே” (நற்றிணை ௨௮)

எனவும்,

“மனைநடு வயலை வேழம் சுற்றும் துறைகேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே அல்ல னென்னும்என் தடமென் தோளே” (ஐங்குறு. ௧௧)

எனவும்,

“வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னுஞ் செருக்கு” (குறள். ௧௧௫௨)

எனவும் வரும்.

இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் என்பது—தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும் வழியும் கூற்று நிகழும் என்றவாறு.

“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு” (குறள். ௧௧௫௨)

எனவும்,

“குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென் றற்றென் தூஉ நெஞ்சம் தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (குறுந். ௧௫௭)

எனவும் வரும்.

கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையம் என்பது—புதல்வன் றோன்றிய நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

இளிவந்த நிலையாவது தன்னை அவமதித்தான் என்னுங் குறிப்பு.

“கரும்புநடு பாத்திக் கதிர்த்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர புதல்வனை யீன்றவெம் மேனி முயங்கல்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே” (ஐங்குறு ௬௫)

என வரும்.

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் என்பது—விருப்பமுடைய உள்ளத்தோடே புதுவோரது நலத்தின்பொருட்டு அகன்ற கிழவனைத் தனது தனிமை மிகவுங்காட்டி அவன்மாட்டுச் செல்கின்ற நெஞ்சத்தை மீட்டு அருகப்பண்ணி அவன் காதலித்தாளை எதிர் பெய்துகொண்டு புணர்ச்சியை மறுத்த ஈரத்தின் கண்ணும் கூற்று நிகழும். ஈரமாவது முற்றும் மறாமை.

“கடல்கண் டன்ன………………………… ஊர்முழுது நுவலுநிற் காணிய சென்மே” (அகம். 176)

என வரும்.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும் என்பது—பிறள்மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து எங்கையர்க்கு உரையென வேண்டிக்கோடற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

‘அகன்றுறை’ என்னுங் கலியுள்,

“நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி இளையவ ரிடைமுலைத் தாதுசோர்ந்து இதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால் ………………………………………… ………………………………………… மண்டுநீர் ஆரா மலிகடல் போலுநின் தண்டாப் பரத்தை தலைக்கொள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனில் தோலாமோ நின்பொய் மருண்டு” (கலித். ௭௩)

எனக் கூறுதலால் தான் தாழ்ந்தவாறும் எங்கையர்க்கு உரை இற்றெனக் கூறியவாறும் காண்க.

“நினக்கே அன்றஃ தெமக்குமார் இனிதே நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி ஈண்டுநீ யருளாது ஆண்டுறை தல்லே.” (ஐங்குறு. ௪௯)

இதுவும் அது.

செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் என்பது—தலைவன் போகாத காலத்துப் போவெனக் கூறுதலும் என்றவாறு.

“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயிற் சென்றீ அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து” (கலித். ௭௯)

என வரும்.

காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும் என்பது—காமக்கிழத்தி தலைவி மகவைத் தழீஇ ஏமுற்ற விளையாட்டின் இறுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“நாயுடை முதுநீர்…………………………… மகன்தா யாதல் புரைவதாங் கெனவே” (அகம். ௰௬)

என வரும்.

சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி யறம்புரி நெஞ்சமொடு தன் வரவறியாமை புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் என்பது—சிறந்த செய்கையினையுடைய அவ்விடத்துத் தலைவன் தோன்றி அறம்புரி நெஞ்சத்தோடே தனது வரவைத் தலைவி யறியாளாக நின்று தலைவியைப் புறஞ்செய்து அவள் மாட்டுள தாகிய ஊடலைப் பெயர்த்தல் வேண்டின இடத்தும் தலைவிமாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழி என்றது—தலைவியுங் காமக்கிழத்தியைப் போலத் தன் மகனைக்கொண்டு விளையாடிய வழியும் என்றவாறு.

‘மையற விளங்கிய” என்னும் மருதக்கலியுள், “பெரும விருந்தொடு கைதூவா வெம்மையும் உள்ளாய் பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள் யாங்கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்தமயின் றற்றாப் பெருந்தகாய் கூறு சில”

எனவும்,

“எல்லிழாய், சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி ஏனாதிப் பாடியம் என்றற்றால் நோய்நாந் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட ஓவா தடுத்தடுத் தத்தத்தாஎன் பான்மாண வேய்மென்தோள் வேய்த்திறஞ் சேர்த்தலும் மற்றிவன் வாயுள்ளிப் போகான் அரோ”

எனவும்,

“உள்ளி உழையே ஒருங்கு படைவிடக் கள்வர் படர்தந் ததுபோலத் தாம்எம்மை எள்ளுமார் வந்தாரே ஈங்கு” (கலித். ௮௧)

எனவும் இவ்வாறு வரும்.

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும் என்பது—தந்தையரை மக்கள் ஒப்பர் என்பதனால் அந்தமில்லாத சிறப்பினையுடைய மக்களைப் பழித்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

“மைபடுசென்னி மழகளிற் றோடை” என்னும் மருதக்கலியுள் “வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு ஈதன் மாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி மாதர்மெல் நோக்கின் மகளிரை நுந்தைபோல் நோய்கூர நோக்காய் விடல்” (கலித். ௮௬)

என வரும்.

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் என்பது—கொடியாரது கொடுமை சுடாநின்றதெனப் புணர்ச்சியை ஒடியாது புகழை விரும்பினோர் சொல்லோடே ஒருப்பட்டு வேறுபடுதலின் நீங்கிய தகுதிக்கண்ணும் என்றவாறு.

அஃதாவது, அக்காலத்துத் தக்கதறிதல். புகழை விரும்பினோர் சொல்லும் சொல்லாவது, காமம் விரும்பும் பரத்தையரைப் போலாது அறத்தை விரும்புதல்.

யாரிவனெங் கூந்தல்’ என்னும் மருதக்கலியுள்,

“மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மென நெருங்கில் தப்பினேன். என்றடி சேர்தலு முண்டு” (கலித். ௮௯)

என்பது ஆற்றாமை வாயிலாகப் பகுதியி னீங்கிய தகுதி.

பாணன் முதலானோர்க்கு வாயில் நேர்ந்தது வந்தவழிக் காண்க.

கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின்கண்ணும் என்பது—தலைவனது கொடுமை யொழுக்கத்தினைத் தலைவியே பொறுக்கவேண்டி அவளடிமேல் வீழ்ந்தவனை நெருங்கி நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இப்பணிதல் நன்றா மெனக் காதலமைந்த வகையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

‘நில்லாங்கு நில்லா’ என்னும் மருதக்கலியுள்,

‘நல்லாய், பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன்; அருளினி; அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள அளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும் விளித்துநின் பாணனோ டாடி யளித்தி விடலை நீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லா நின்பூழ்.” (கலித். ௯௫)

இதனுள் ‘கையொடு கண்டை பிழைத்தேனருள்’ என அடிமேல் வீழ்ந்தவாறும், ‘அருளுகம் யாம் யாரேம்’ எனக் காதலமைந்தவாறும் ‘நீ நீக்கலின் நின் பூழெல்லாம் நடலைப்பட்டு நோய்பெரிதேய்க்கும்’ அவற்றை யின்னும் விளித்து நின் பாணனோடாடி யளித்துவிடும் எனவும், இப் பணிதல் நின் பெண்டிர்க்கு நன்றாகுமே எனவும் கூறியவாறு காண்க. ஈண்டுப் பூழ் என்றது குறிப்பினாற் பரத்தையரை.

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளியவழியும் என்பது—தாயரைக் கிட்டிய நல்ல அணியையுடைய புதல்வனை மாயப் பரத்தை குறித்த வழியுங் கூற்று நிகழும் என்றவாறு.

புதல்வனைப் பரத்தைமை குறித்தலாவது, ‘தலைவன் புறப் பெண்டிர் மாட்டுப் போகியவழி வெகுளுமாறு போலப் புதல்வனையும் அவரிடைச் சென்றவழி வெகுளல். கண்ணிய நல்லணி யெனவே அவர் கொடுத்த நல்லணி யென்பது பெறுதும். பரத்தைமை உள்ளாதவழி இவள் மாட்டுக் குறிப்பு நிகழாதாம். மாயமென்பது பரத்தைக்குப் பண்பாகி இனஞ் சுட்டாது வந்தது.

“உறுவளி தூக்கும் உயர்சினை மாவின் … … … … … யானே தவறுடை யேன்” (கலித். ௮௪)

எனவரும்.

தன்வயிற் சிறப்பினும் அவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்ணும் என்பது—தன்மாட்டு நின்ற மிகுதியானும் அவன்மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத பழைய சூளுறவைத் தலைவி யெடுத்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு.

தலைமகள் மாட்டு மிகுதி யாதோ வெனின்,

“மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய” (பொருளியல். 32)

என்றாராகலான், அக்காலத்து மிகுதியுளதாம்.

“தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு” (கலித். ௮௮)

எனவரும்.

காமக்கிழத்தி நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என்பது—காமக் கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

நலம்பாராட்டுவாள் தலைவி: அவள் பாராட்டுதல் தீமை பற்றி வருதலான், அதனாற் சொல்லிமுடிப்பது பிறபொருளாயிற்று.

“கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே.” (ஐங்குறு. ௧௨௨)

இதனான், அவள் மிக்க இளமைகூறித் தலைவனைப் பழித்தாளாம்; ஒருமுகத்தாற் புலந்தவாறு. இன்னுந் தலைமகள் நலம்பாராட்டியவழிக் கூறவும் பெறும்.

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியர்எம் கணவனை யான் ஆகியர்நின் நெஞ்சுநேர் பவளே” (குறுந். ௪௯)

என வரும்.

கொடுமை ஒழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப்பின் கற்பின்திரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும்பெட்டலும் ஆவயின் வருஉம் பல்வேறு நிலையினும் என்பது—தலைவி கொடுமை யொழுக்கத்துத் தோழிக்குக் கூறுதற் குரியவை குற்ற மற்றசிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது தலைவனைக் காய்தலும் உவத்தலும் நீக்கி நிறுத்தலும் பேணிக்கோடலும் அவ்விடத்து வரும்பலவாய் வேறுபட்டு வரு நிலையினும் தலைவி கூற்று நிகழும்என்றவாறு.

தோழிக்குரியவை என்றதனால் தோழிக்குக் கூறத்தகாதனவும் உள என்று கொள்க.

“நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவிய தெவனோ அன்பிலங் கடையே.” (குறுந். 93)

இது காய்தல் பற்றி வந்தது.

“நாமவர் திருந்தெயி றுண்ணவும் அவர்நம தேந்துமுலை யாகத்துச் சாந்துகண் படுப்பவுங் கண்டுசுடு பரத்தையின் வந்தோற் கண்டும் ஊடுதல் பெருந்திரு உறுமெனப் பீடுபெறல் அருமையின் முயங்கி யேனே”

எனவும்,

“காணுங்கால் காணேன் தவறாய காணாக்காற் காணேன் தவறல் லவை” (குறள். ௧௨௮௧)

எனவும் இவை உவத்தல் பற்றி வந்தன.

“அடும்பவிழ் அணிமலர் சிதைஇ மீன் அருந்துந் தடந்தாள் நாரை யிருக்கும் எக்கர்த் தண்ணந் துறைவற் றொடுத்து நன்னலங் கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டக் கொடுத்தவை தாஎனக் கூறலின் இன்னா தோநம் மன்னுயிர் இழவே.”

இது பிரித்தல் பற்றி வந்தது.

“நீரார் செறுவில் நெய்தலொடு… … … … … … பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவேன் தோழி கடன்நமக் கெனவே.” (கலித். 75)

இது பெட்பின்கண் வந்தது.

“நகையா கின்றே தோழி… மம்மர் நெஞ்சினன் தொழுது நின்றதுவே.” (அகம். 56)

இது மேற்கூறியவாற்றா னன்றிப் பிறவாற்றான் வந்தது.

“ஒலிபுனல் ஊரனை ஒருதலை யாக வலிநமக் காவது வலியென் றொழியப் பந்தர் மாட்டிய பருஉச்சுடர் விளக்கத்துக் கந்த முனித்தலைத் தும்பி ஆர்ப்பக் காலை கொட்டிய கவர்தோற் சிறுபறை மாலை யாமத்து மதிதர விடாது பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வனைக் காண்டலுங் காணான்தன் கடிமனை யானே”

எனவரும்.

வாயிலின் வருஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவதென்ப என்பது—வாயில்கள்மாட்டு வருஉங் கூற்றுவகை யுளப்படத் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.

வாயில்களாவார் ;—பார்ப்பார், பாங்கன், தோழி, செவிலி, பாணன், விறலி, இளையர், விருந்தினர், கூத்தர், அறிவர், கண்டோர்.

இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறுதலின் ஒழிந்த வாயில்கள் ஈண்டுக் கொள்ளப்படும்.

“அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்தூண் நிரம்பா மேனியொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.” (குறுந். ௩௩)

இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது.

“நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையின மொழிமோ வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.” (குறுந். ௭௫)

இது வருகின்றான் என்ற உழையர்க்குக் கூறியது.

“ஆடியல் விழவின்… … … பயனின் றம்மவிவ் வேந்துடை அவையே” (நற்றிணை. ௯௰)

இது பாங்கனைக் குறித்துக் கூறியது.

“நெய்யுங் குய்யும்… … … விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே.” (நற்றிணை. ௩௮௰)

‘வாயிலின் வருஉம் வகை’ என்றமையான், தன் ஆற்றாமையும் வாயில்களாக் கொள்ளப்படும் என்பது பெற்றாம்.

“புல்லேன் மகிழ்ந புலத்தலுமிலனே… கோல்நேர் எல்வளை நெகிழ்த்த நும்மே.” (நற்றிணை. ௩௪௰)

இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது.

‘[?]ள்ளிமி ழகல்வயின்’ என்ற மருதக்கலியுள்,

“பூங்கட் புதல்வனைப் பொய்பா ராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயின் சென்றீ அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து” (கலித். ௭௯)

என்று புதல்வன் வாயிலாக் கூறியது காண்க.

நச்சினார்க்கினியர்

இது, முறையானே தலைவிகூற்று நிகழும் இடங் கூறுகின்றது.

(இ-ள்) அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் றிரியா அன்பின்கண்ணும்; அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் வேதத்தையுந் தரும நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத் தலைவி மிக அறியுமாதலின்; ஏற்றற்கண்ணும் - அந்தணர் முதலிய மூவருந் தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம் மனைவியர் பலருள்ளுந் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின் உயர்த்தல் செய்யுமிடத்தும்; நிறுத்தற்கண்ணும் - தத்தங் குலத்திற்கேற்ப நிறுத்துதலைச் செய்யுமிடத்தும்; உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் -அவர் குலத்திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து; பெருமையில் திரியா அன்பின்கண்ணும்—தத்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும் நீங்காத அன்பு செய்து ஒழுகுதற்கண்ணும் : அறியுமாகலின் அன்புசெய்து ஒழுகுமெனக் கூட்டுக.

என்றது, அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு உரியர்; ஏனையோர் வேள்விக்கு உரியரல்லரென்பதூஉம் அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்றவகையின் உரிமை கொடுப்பரென்பதூஉம் அவர்களும் இது கருமமே செய்தானென்று அன்பில் திரியாரென்பதூஉங் கூறியவாறு.

“நின்ற சொல்லர்……செய்பறியலரே” (நற்றிணை. 1)

இதனுள், தாமரைத்தாதையும் ஊதிச் சந்தனத்தாதையும் ஊதி வைத்த தேன்போலப் புரைய என்றதனான் ஏற்றற்கண் தலைவி கூறினாள். பிரிவறியலரென்றதும் அன்னதொரு குணக்குறையில ரென்பதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாம்.

“நிலத்தினும் பெரிதே……நட்பே” (குறுந். 3)

இது, நிறுத்தற்கட் கூறியது.

கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - அறமும் பொருளுஞ் செய்வதனாற் புறத்துறைதலில் தலைவனைத் தலைவி நீங்குங்காலம் பெரிதாகலின் அதற்குச் சுழற்சிமிக்க வேட்கைமிகுதி நிகழ்ந்த விடத்தும்:

“காமந் தாங்குமதி……இல்லாகுதுமே” (குறுந். 290)

இது, தெருட்டுந் தோழிக்குத் தலைவி காமத்து மிகுதிக்கட் கூறியது.

இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் - அங்ஙனம் அலமரல் பெருகியவழித் தலைவனை எதிர்ப்பட்டஞான்று இன்பமுந் தனிப்பட்டஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும்:

“வாரல் மென்தினைப்……விறலோன் மார்பே” (நற்றிணை, 304)

“இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சம் புன்க ணுடைத்தாற் புணர்வு” (குறள். 1152)

எனவரும்.

கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின்நீக்கிய இளிவரு நிலையும் —யானைக்கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தையுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை வருத்தித் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக்கண்ணும்;

தன்னை அவமதித்தானென்றது இளிவரு நிலையென்றார்.

“கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல்” (ஐங்குறு. 65)

இது, புதல்வற் பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது.

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனை - புதல்வனை விளையாட்டை விரும்பின உள்ளத்தோடே புதுவது புணர்ந்த பரத்தையர் தன்மாட்டு மனநெகிழ்ந்த மென்மையின்பொருட்டு அவர்க்கு அருள்செய்யப் பிரிந்து வந்தானை; புலம்பு நனி காட்டி - தனது தனிமை மிகவும் அறிவித்து; இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த்து அருக்கி - அவன் மேற் சென்ற நெஞ்சினைச் செல்லாமல் அவனிடத்தினின்றும் மீட்டு அருகப்பண்ணி; எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் - பிறருள் ஒருத்தியைக் காணாளாயினுங் கண்டாள்போலத் தன்முன்னர்ப் பெய்துகொண்டு வாயின் மறுத்ததனால் தோற்றிய நயனுடைமைக்கண்ணும் :

எனவே, மறுப்பாள்போல் நயந்தாளாயிற்று. கிழவனை மறுத்தவெனக் கூட்டுக.

“கடல்கண் டன்ன…………………… ஊர்முழுது நுவலுநிற் காணிய சென்மே” (அகம். 176)

எனவரும்.

எதிர்பெய்து மறுத்த ஈரமெனவே எதிர்பெய்யாது மறுத்த ஈரமுங் கொள்க.

“கூர்முள் முள்ளி”…………………… நெஞ்சறை போகிய அறிவி னேற்கே.” (அகம். 26)

இதனுள் ஒருத்தியை வரைந்து கூறாது நல்லோரைப் பொதுவாகக் கூறியவாறும் வேண்டினமெனப் புலம்புகாட்டிக் கலுழ்ந்ததென ஈரங்கூறியவாறுங் காண்க.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும் - பரத்தையர்மாட்டுத் தங்கிய செவ்வியை மறையாத ஒழுக்கத்தோடே வந்த தலைவனைநீ கூறுகின்ற பணிந்த மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறென இரந்துகோடற் கண்ணும்;

“அகன்றுறை யணிபெற” என்னும் மருதக்கலியுள்

‘நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்” (73)

என்பன கூறி,

“மண்டுநீ ராரா மலிகடல் போலுநின் தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனில் தோலாமோ நின்பொய் மருண்டு” (கலி. 73)

எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க.

செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் - தலைவன் செல்லானென்பது இட்டுங் காலமும்பற்றி அறிந்த காலத்து ஊடலுள்ளத்தாற் கூடப்பெறாதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்றுதற்கண்ணும்;

“புள்ளிமி ழகல்வயல்” என்னும் மருதக்கலியுள்

“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயிற் சென்றி அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து” (கலி. 79)

எனவும்,

“சேற்றுநிலை முனைஇய… சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகம். 46)

எனவும் வரும்.

காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் - மனையறத்திற்கு உரியளாக வரைந்துகொண்ட காமக்கிழத்தி, தலைவி புதல்வன் மனைப்புறத்து விளையாடுகின்றவனைத் தழுவிக்கொண்டு தான் ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின் கண்ணும்:

அவள் எம்மைப் பாதுகாப்பீரோவென வினாயவழி அவனும் அதற்கு உடன்பட்டான்போலக் கூறுவன உளவாதலின் ‘ஏமுறு விளையாட்டு’ என்றார். ‘இறுதி’ யென்றார் விளையாட்டு முடியுந் துணையுந் தான் மறையநின்று பின்னர்க் கூறுதலின்.

“நாயுடை முதுநீர்க்…… மகன்தாய் ஆதல் புரைவதாங் கெனவே” (அகம். 16)

என வரும்.

(சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்) சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி—காமக்கிழத்தியது ஏமுறும் விளையாட்டுப்போலாது தலைவி தன் புதல்வனைத் தழீஇ விளையாட்டையுடைய இல்லிடத்தே தலைவன் தோன்றி; அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து - அவ் விளையாட்டு மகிழ்ச்சியாகிய மனையறத்தினைக் காண விரும்பிய நெஞ்சோடே தன் வரவினைத் தலைவி அறியாமல் அவள் பின்னே நிற்றலைச்செய்து; பெயர்த்தல் வேண்டு இடத்தானும் - தலைவியது துனியைப் போக்குதல் வேண்டிய இடத்தும்:

‘தன்வரவறியாமை’ என்றதற்குத் தன்னைக் கண்டால் தலைவியுழை நின்றார் தனக்குச் செய்யும் ஆசாரங்களையும் அவர் செய்யாமற் கைகவித்துத் தன் வரவு அறியாமை நிற்பனென்று கொள்க.

“மையற விளங்கிய மணிமருள் அவ்வாய்…… தாவா விருப்பொடு கன்றியாத் தூழிச்செல்லும் ஆபோற் படர்தக நாம்” (கலி. 81)

என வரும்.

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் - அங்ஙனம் விளையாடுகின்ற காலத்து மக்கள் தந்தையரை ஒப்பரென்னும் வேத விதிபற்றி முடிவில்லாத சிறப்பினையுடைய மகனைப் பழித்து வெகுளுதற்கண்ணும் :

மகனுக்கும் இது படுமென்று கருதிக் கூறலின் தலைவனைப் பழித்தென்னாது ‘மகப்பழித்’ தென்றார்.

‘மைபடு சென்னி” என்னும் மருதக்கலியுள்,

“வனப்பெலா நுந்தையை யொப்பினும்…… மென்றோள் நெகிழ விடல்” (கலி 86)

என அவனைக் கொண்டு விளையாடியவழி அவன் தலைவன்மேல் வீழ்தலின்,

தந்தை வியன்மார்பில் பாய்ந்தான் அறனில்லா அன்பிலி பெற்ற மகன் (கலி. 86)

எனத் தன் திறத்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு காண்க.

(கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்) கொடியோர் நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ - கொடியோரென்றது பாணர் கூத்தர் விறலியர் அந்தணர் முதலியோரை; கொடியோராய்த் தலைவன் புகழைக் கூறுதற்கு விரும்பினோர் பரத்தையர்க்கு வாயிலாய் வந்து கூறிய சொல்லோடே தானும் அவரிடத்தே சேர்ந்து ; பகுதியி னீங்கிய கொடுமை - காவற்பாங்கிற் பக்கமும் ஆங்கோர் பக்கமுமாகிய பகுதி காத்தலினின்று நீங்கிய பரத்தையரைக் கூடிய கொடுமை; சுடுமென ஒடியாது தகுதிக்கண்ணும் - நெஞ்சைச் சுடுமென்று கூறி அவன் தவற்றைக் கூறுதலைத் தவிராமற் கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும்;

இன், நீக்கப்பொருட்டு; பகுதி - கூறுபாடு, ஆகுபெயர்; பகுதிகளைக் காத்தற்குப் பிரிவேனெனக் கூறிப் பிரிந்து பாணர் முதலியோர் புதிதிற் கூட்டிய பரத்தையரிடத்தே ஒழுகிய மெய் வேறுபாட்டோடு வந்தானைக் கண்டு அப்பகுதிகளைப் பரத்தையராகக் கூறுவாளாயிற்று. அது, “இணைபட நிவந்த” என்னும் மருதக்கலியுள்,

“கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப் பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டென்றானோ பேணானென் றுடன்றவர் உகிர்செய்த வடுவினான் மேல்நாள்நின் தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை நாடிநின் தூதாடித் துறைச்செல்லாள் ஊரவர் ஆடைகொண் டொலிக்குநின் புலைத்திகாட் டென்றாளோ கூடியார்ப் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியார் எறிதர ஒளிவிட்ட அரக்கினை; வெறிதுநின் புகழ்களை வேண்டாரின் எடுத்தேத்தும் அறிவுடை அந்தணன் அவளைக்காட் டென்றானோ களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின்மேல் குறிபெற்றார் குரற்கூந்தல் கோடுளர்ந்த துகளினை” (கலி.72)

என்பவற்றாற் பாணர் முதலியோர் வாயிலாயவாறு காண்க.

“ஏந்தெழின் மார்ப எதிரல்ல நின்வாய்ச்சொல்… … … … … … … … … உருவழிக்கும் அக்குதிரை யூரல் நீ ஊரில் பரத்தை பரியாக வாதுவனாய் என்று மற்றச்சார்த் திரிகுதிரை யேறிய செல்.” (கலி. 96)

இதனுட் பாணன் தூதாட வாதத்தான் வந்த குதிரை யென்பதனால் அவன் கூட்டிய புதிய பரத்தையர் என்பதூஉம் அவன் பகுதியினின்று நீங்கியவாறுங் குதிரையோ வீறியதென்பது முதலியவற்றாற் கொடுமை நெஞ்சைச் சுடுகின்றவாறும் அதனை நீக்கிய பரத்தையரைக் குதிரையாகக் கூறித் தான் அதற்குத் தக்கு நின்றவாறுங் காண்க.

கடவுட்பாட்டு ‘ஆங்கோர் பக்கமும்’ யானைப்பாட்டுக் ‘காவற் பாங்கின் பக்க’முமாம்.

கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின்கண்ணும்: கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி - அங்ஙனம் பகுதியினீங்கிப் பரத்தையர்மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தலை வேண்டி ; அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி - தன் அடிமேல் வீழ்ந்து வணங்கிய தலைவனை அதனின்மீது துனிமிக்குக் கழறி; காதல் எங்கையர் காணின் நன்றென - நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இவை நன்றெனக் கொள்வரெனக் கூறி; மாதர் சான்ற வகையின்கண்ணும் - காதல் அமைந்து மாறிய வேறுபாட்டின் கண்ணும்:

பொறாதாரைக் கொள்ளா ரென்பவாகலிற் கோடல் பொறுத்தலாயிற்று. ‘காதலெங்கையர், மாதர் சான்ற’ என்பனவற்றால் துனிகூறினார். எனவே, யாங்கண்டதனாற் பயனின் றென்றார்.

“நில்லாங்கு நில்” என்னும் பூழ்ப்பாட்டினுள்,

“மெய்யைப்பொய் யென்று மயங்கிய கையொன் றறிகல்லாய் போறிகாணீ; நல்லாய், பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி, அருளுகம் யாம்யாரேம் எல்லா தெருள அளித்துநீ பண்ணிய பூழெல்லாம் இன்னும் விளித்துநின் பாணனொ டாடி அளித்தி விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லாநின் பூழ்.” (கலி. 95)

இதனுள் ‘அருளினி’யென அடிமேல் வீழ்ந்தவாறும் ‘அருளுகம் யாம்யார்’ எனக் காதல் அமைந்தவாறும் ‘விளித்தளித்தி’ யென இப் பணிவை நின் பெண்டிர் கொள்வரெனவுங் கூறியவாறுங் காண்க.

“நினக்கே அன்றஃ தெமக்குமார் இனிதே நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினை யாகி ஈண்டுநீ அருளா தாண்டுறை தல்லே.” (ஐங்குறு. 46)

இதுவும் அது.

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் - பரத்தையர் கருதி அணிந்த நன்றாகிய அணிகளையுடைய புதல்வனை மாயப் பரத்தைமையைக் குறித்த விடத்தும்:

அவருள் துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத்தினை உணர்த்தியும் தலைநின்றொழுகும் பரத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குக் ‘கண்ணிய’ என்றார். பரத்தையர்சேரி சென்று அணியணிந்ததற்கு வெகுண்டு கூறலிற் பொய்யாகிய பரத்தை யென்றார். எனவே தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று.

“உறுவளி தூக்கும் உயர்சினை மாவின்… யானே தவறுடையேன். (கலி 84)

எனவரும்.

தன்வயிற் சிறைப்பினும் - தலைவனில் தான் புதல்வற்குச் சிறந்தாளாகி அத் தலைவன்மாட்டும் அவன் காதலித்த பரத்தையர்மாட்டுஞ் செல்லாமற் புதல்வனைத் தன்பாற் சிறைசெய்தற் கண்ணும்:

புள்ளிமி ழகல்வயல்” என்னும் மருதக்கலியுள்,

“அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால் தோய்ந்தாரை அறிகுவென் யானெனக் கமழுநின் சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ;

புல்லலெம் புதல்வனைப் புகலகநின் மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானால் மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பில் பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ;

கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானால் நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ;

எனவாங்கு, பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர்வயின் சென்றி அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து.” (கலி. 9)

இது தலைவனிடத்தினின்றும் புதல்வனைச் சிறைத்தது.

‘ஞாலம் வறந்தீர” என்னும் மருதக்கலியுள், (கலி. 82)

“அவட்கினி தாகி விடுத்தனன் போகித் … … … … … அமைந்த தினிநின் றொழில்.

இது காதற்பரத்தையர்பாற் புதல்வன் செல்லாமற் சிறைத்தது.

அவன்வயிற் பிரிப்பினும் — தன்னொடு மைந்தனிடை உறவு நீக்கி அவனைத் தலைவனொடு சார்த்துதற் கண்ணும்.

என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம்.

“மைபடுசென்னி” என்னும் மருதக்கலியுள், (கலி. 86)

“மறைநின்று, தாமன்ற வந்தீத் தனர்; ஆயிழாய், தாவாத எற்குத் தவறுண்டோ காவாதீங் கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங் கன்றி அதனைக் கடியவுங் கைந்நீவிக் குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா அன்பிலி பெற்ற மகன்.”

என்புழி “அறனில்லா அன்பிலி பெற்ற மகன்” எனவும், “நின் மகன் றாயாதல் புரைவதா லெனவே” என்புழி “நின்மகன்” எனவும் பிரித்தவாறு காண்க.

இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்ணும் - இன்னாங்குப் பயக்குஞ் சூளுறவினைத் தலைவன் சூளுறுவலெனக் கூறுமிடத்தும்;

தலைவன் ‘வந்தகுற்றம் வழிகெட’ ஒழுகிக், களவிற் சூளுறவான் வந்த ஏதம் நீக்கி, இக்காலத்துக் கடவுளரையும் புதல்வனையுஞ் சூளுறுதலின் ‘இன்னாத சூள்’ என்றார் அது களவுபோலச் சூளுறுதலின் ‘தொல்சூள்’ என்றார்.

“ஒரூஉக்கொடி யியனல்லார்” என்னும் மருதக்கலியுள். (கலி 88)

“வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை தேற்றக்கண் டியாய் தெளிக்கு; இனித் தேற்றம் யாம்; தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு” (கலி.88)

எனத் தலைவி எம்மேலே இப் பொய்ச்சூளால் வருங்கேடு வருமென மறுத்தவாறு காண்க.

காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்: நலம் பாராட்டிய காமக்கிழத்தியர் - தலைவி தன்னிற் சிறந்தாராகத் தன்னான் நலம்பாராட்டப்பட்ட இற்பரத்தையர்; தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்—மேல் தீமையுறுவரென முடித்துக்கூறும் பொருளின் கண்ணும்;

“மடவ ளம்மநீ இனிக்கொண் டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலர்நீ ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே. (ஐங்குறு 67)

இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்ததாக வரைந்துகொண்ட பரத்தை தன்னொடு இளமைச் செவ்வி ஒவ்வா என்னையுந் தன்னோடொப்பித்துத் தன் பெரிய நலத்தாலே மாறுபடுமென்பவென அவள் நலத்தைப் பாராட்டியவாறும். நீ பசப்பித்தோர் வண்டு தாது உண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறுங் காண்க.

“அணிற்பல் லன்ன” (குறுந். 49) என்னும் பாட்டுக் கற்பாகலின் இதன்பாற்படும்.

கொடுமையொழுக்கம் தோழிக்கு உரியவை வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வருஉம் பல்வேறு நிலையினும்- கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை — பரத்தையிற் பிரிவும் ஏனைப்பிரிவுகளும் ஆகித் தலைவன்கண் நிகழுங் கொடுமை யொழுக்கத்தில் தோழி கூறுவதற்கு உரியவென மேற்கூறுகின்றவற்றைக் கேட்டவழி; வடுவறு சிறப்பிற் கற்பில திரியாமை- எஞ்ஞான்றுங் குற்றமின்றி வருகின்ற பிறப்பு முதலிய சிறப்பிடத்துங் கற்பிடத்துந் திரிவுபடாதபடி; காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் நிலையினும்-தோழி கூற்றினை வெகுளலும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும் பின்னும் அவள் கூற்றினைக் கேட்டற்கு விரும்புதலுமாகிய நிலையின்கண்ணும்; ஆவயின் வருஉம் நிலையினும்-அத்தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலுமாய் வரும் நிலையின்கண்ணும்; பல்வேறு நிலையினும் - இக்கூறியவாறன்றிப் பிறவாற்றாய்ப் பல்வேறுபட்டு வரும் நிலையின்கண்ணும் :

அவள்வயினென்னாது ‘ஆவயி’னென்றார், தோழியும் பொருளென்பதுபற்றி.

“இதுமற் றெவனோ……நமக்கே. (குறுந்.181)

இது தோழி இன்னாக்கிளவி கூறியதனை இதுபொழுது கூறிப் பயந்த தென்னெனக் காய்ந்து கூறினாள்.

“பார்பக வீழ்ந்த……பண்பே”. (நற்றிணை. 24)

இது செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது.

“வண்டுபடத் ததைந்த கொடியிணர் பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே”. (குறுந். 21)

இது கானங் காரெனக் கூறவும் வாராரென்றவழி அது கூறினும் யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தாற் பிரிந்தது.

“யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின் உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத் திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப் பொறிமயி ரெருத்திற் குறுநடைப்பேடை பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் தயங்க விருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.” (குறுந். 154)

இது, வல்லுவோர் என்னும் பெயர் கூறித் தோழி கொடுமை கூறியவழி அவளையே பிரிதல்வன்மை யாங்கறிந்தனரெனத் தலைவி வினவுதலின் அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம்.

இனித் தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலியன வருமாறு ;

“நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவிய தெவனோ அன்பிலங் கடையே.” (குறுந். 93)

இது. காய்தல்.

“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பசுப்பத் ததைந்த நெய்தல் கழிய ஓதமொடு பெயருந் துறைவற்குப் பைஞ்சாய்ப் பாவை யீன்றனென் யானே.” (ஐங்குறு. 155)

இது, பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற்றிற்கு உரிய காலங்கழிய ஒழுகா நின்றாயென நெருங்கிய தோழிக்கு யான் களவின்கண் மகப்பெற்றேனெனக் காய்ந்து கூறியது.

“கொடிப்பூ வேழந் தீண்டி யயல வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும் மணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின்சா யற்றே.” (ஐங்குறு. 14)

இஃது, உவத்தல்.

“புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகிற் றோன்றும் ஊரன் புதுவோர் மேவல னாகலின் வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே.” (ஐங்குறு 17)

இது, பிரித்தல்.

“நாமவர் திருந்தெயி றுண்ணவு மவர்நமது ஏந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவுங் கண்சுடு பரத்தையின் வந்தோர்க் கண்டும் ஊடுதல் பெருந்திரு வுறுகெனப் பெறலரு மையின் முயங்கி யோனே.”

இது, பெட்டது.

“நீரார் செறுவின்’ (கலி 75) என்னும் மருதக்கலியும் அது.

இனிப் ‘பல்வேறு நிலை’யாவன:- தோழி பிரிவுணர்த்திய வழிச் செலவழுங்கக் கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்துழி வழியருமை பிறர் கூறக்கேட்டுக் கூறுவனவும், தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து தானே கூறுவனவுந், தூதுவிடக் கருதிக் கூறுவனவும், நெஞ்சினையும் பாணனையும் தூதுவிட்டுக் கூறுவனவும், வழியிடத்துப் புட்களை நொந்து கூறுவனவும், பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலெனக் கூறுவனவும், அவன்வரவு தோழி கூறியவழி விரும்பிக் கூறுவனவுங், கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனொடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருத்திய குழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறுதலுந், தலைவன் தவறிலனெனக் கூறுவனவும், புதல்வனை நீங்காதொழுகிய தலைவன் நீங்கிய வழிக் கூறுவனவும், காமஞ் சாலா விளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேனெனக் கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம்.

“அருளு மன்பு நீக்கி …..நாமே” (குறுந். 20)

இது, செலவழுங்கக் கூறியது.

“வெந்திறற் கடுவளி……சென்றவாறே’ (குறுந். 39)

“எறும்பி அளையிற் …..வழுங்க லூரே’ (குறுந். 12)

இவை, வழியருமை கேட்டவழிக் கூறியன.

“நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையாரென் ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவ தெவன்கொல் அறியே னென்னும்’ (கலி. 4)

இது, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறியது கொண்டு கூறிற்று.

“பலர்புகழ் …..மறவாதீமே.” (ஐங்குறு. 473)

இது, தூதுவிடக் கருதிக் கூறியது.

“சூழ்கம் வம்மோ……பொருளே.” (ஐங்குறு. 317)

இது, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது

“மையறு சுடர்நுதல்……பாணனதறிவே.” (ஐங்குறு 474)

இது, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது.

‘புல் வீழ் இற்றிக்……தூதே.’ (குறுந். 106)

இது, தூது கண்டு கூறியது.

“ஆம்பற் பூவின்……சென்ற நாட்டே.” (குறுந். 46)

இது, சென்ற நாட்டு இவை இன்றுகொலென்றது.

“வாராராயினும்……என்னாதோரே.” (குறுந். 110)

இது, பருவங்கண்டு அழிந்து கூறியது

“உதுக்கா ணதுவே……மன்னே.” (குறுந். 191)

இது, காய்ந்து கூறியது.

“முதைப்புனங் கொன்ற……வாராதே.” (குறுந். 155)

இது, பொழுதொடு தான் வந்தன்றெனப் பொழுது கண்டு மகிழ்ந்து கூறினாள்.

‘அம்ம வாழி……அழப்பிரிந்தோரே.’ (ஐங்குறு. 334)

இது, வன்புறை எதிரழிந்து கூறியது.

“அம்ம வாழி……யென்னு மாறே.” (ஐங்குறு. 333)

இது, புள்ளை நொந்து கூறியது.

“காதல ருழைய……ஞான்றே.” (குறுந். 41)

இஃது, ஆற்றுவலெனக் கூறியது.

“நீகண் டனையோ……காதலர் வரவே.” (குறுந். 75)

இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது.

“இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் உம்மையா மென்பவ ரோரார்காண்—நம்மை எளிய ரென நினைந்த வின்குழலா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு.” (திணை. நூற். 123)

இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது.

“பெருங்கடல் திரையது சிறுவெண் காக்கை நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந் துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனோடு யாத்தேம் யாத்தன்று நட்பே அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே.” (குறுந். 313)

இது, தலைவன் தவறிலனென்று கூறியது.

“உடலினே னல்லேன் பொய்யா துரைமோ யாரவன் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வெளவி யோளே.” (ஐங்குறு. 66)

இது, புதல்வனை நீங்கியவழிக் கூறியது.

“கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே பலரொடு பெருந்துறை மலரொடு வந்த தண்புனல் வண்ட லுய்த்தென உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. (ஐங்குறு. 69)

இது காமஞ்சாலா விளமையோளைக் களவின் மணந்தமை அறிந்தேனென்றது.

வாயிலின் வருஉம் வகையொடு தொகைஇ - வாயில் தன் ஏதுவாகத் தலைவிக்கு வருங் கூற்று வகையோடு கூட்டி ;

வாயில்களாவார் செய்யுளியலுட் கூறும் பாணன் முதலியோர். வகையென்றதனான் ஆற்றாமையும் புதல்வனும் ஆடை கழுவுவாளும் பிறவும் வாயிலாதல் கொள்க.

“கொக்கினுக் கொழிந்த தீம்பழம் கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய வாம்பல் தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழுந் தண்டுறை யூரன் தண்டாப் பரத்தமை புலவா யென்றி தோழி புலவேன் பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சுடுநந் துடைக்குந் தொன்றுமுதிர் வேளிர் குன்றூ ரன்னவென் நன்மனை நனிவிருந் தயருங் கைதூ வின்மையி னெய்தா மாறே.” (நற்றிணை. 280)

இந் நற்றிணை தலைவனொடு புலவாமை நினக்கு இயல்போவென்ற தோழிக்கு விருந்தாற் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலேனல்லது புலவேனோ என்றவாறு.

“அன்னா யிவனோ ரிளமா ணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்தூ ணிரம்பா மேனியொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.” (குறுந். 33)

இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது.

“காண்மதி பாணநீ யுரைத்தற் குரியை துறைகெழு கொண்கன் பிரிந்தென இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே.” (ஐங்குறு. 140)

இது, பரத்தையிற் பிரிந்துழி அவன் நின் வார்த்தையே கேட்பனென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது.

“ஆடியல்விழவின்,…வேந்துடை யவையே.” (நற்றிணை. 90)

இது பாணனைக் குறித்துக் கூறியது.

“நெய்யுங் குய்யு மாடி……வேட்டதில் வழியே.” (ஷை. 380)

இது பாணனுக்கு வாயின் மறுத்தது.

“புல்லேன் மகிழ்ந………நும்மே.” (ஷை. 340)

இஃது, ஆற்றாமை வாயிலாகச்சென்றுழித் தலைவி கூறியது.

“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்குந் தண்கடற் சேர்ப்பனொடு வாரான் தான்வந் தனனெங் காத லோனே.” (ஐங்குறு. 157)

இது, வாயில் வேண்டி ஒழுகுகின்றான் புதல்வன் வாயிலாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது.

“கூர்முண் முள்ளி” என்னும் (26) அகப்பாட்டு ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தடையின்றிக் கூறியவாறு

மாறாப் புண்போன் மாற்றச் சீற்றங் கனற்றப் பின்னும் புலவி கூர்ந்து தலைவன் கேட்ப முன்னிலைப் புறமொழியாக யான் நோமென்னவும் பொல்லாரென வலிதிற் கூறியவாறு காண்க.

“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி” (கலி. 79) எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு காண்க.

“நாடிநின் றூதாடித் துறைச்செல்லா ளூரவர் ஆடைகொண் டொலிக்குநின் புலத்திகாட் டென்றாளோ கூடியார் புனலாடப் புணையாய மார்பினில் ஊடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை.” (கலி. 72)

இஃது ஆடை கழுவுவாளை வாயிலென்றது.

பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனாற் கொள்க.

கிழவோள் செப்பல் கிழவது என்ப—இப் பத்தொன்பதுங் கிழவோளுக்கு உரிமையுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. முன்னர் நின்ற ஏழனுருபுகளைத் தொகுத்து இன்னதன் கண்ணும் இன்னதன்கண்ணுந் தலைவி செப்புதலை வாயிலின் வகையோடே கூட்டிக் கிழவோள் செப்பல் வாயிலின் வருஉம் வகையொடு தொகைஇ என மாறுக.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avaṉ aṟivu āṟṟa aṟiyum ākaliṉ
ēṟṟaṟ kaṇṇum niṟuttaṟkaṇṇum
urimai koṭutta kiḻavōṉ pāṅkil
perumaiyiṉ tiriyā aṉpiṉkaṇṇum
5kiḻavaṉai makaṭūup pulampu peritu ākaliṉ
alamaral perukiya kāmattu mikutiyum
iṉpamum iṭumpaiyum ākiya iṭattum
kayantalai tōṉṟiya kāmar neyyaṇi
nayanta kiḻavaṉai neñcu puṇṇuṟīi
10naḷiyiṉ nīkkiya iḷi varu nilaiyum
pukaṉṟa uḷḷamoṭu putuvōr cāyaṟku
akaṉṟa kiḻavaṉaip pulampu naṉi kāṭṭi
iyaṉṟa neñcam talaip peyarttu arukki
etir peytu maṟutta īrattu maruṅkiṉum
15taṅkiya oḻukkattuk kiḻavaṉai vaṇaṅki
eṅkaiyarkku urai eṉa irattaṟkaṇṇum
cellāk kālai celka eṉa viṭuttalum
kāmak kiḻatti taṉ makat taḻīi
ēmuṟu viḷaiyāṭṭu iṟutikkaṇṇum
20ciṟanta ceykai av vaḻit tōṉṟi
aṟam puri uḷḷamoṭu taṉ varavu aṟiyāmai
puṟam ceytu peyarttal vēṇṭu iṭattāṉum
tantaiyar oppar makkaḷ eṉpataṉāl
antam il ciṟappiṉ makap paḻittu neruṅkalum
25koṭiyōr koṭumai cuṭum eṉa oṭiyātu
nal icai nayantōr colloṭu tokaii
pakutiyiṉ nīṅkiya takutikkaṇṇum
koṭumai oḻukkam kōṭal vēṇṭi
aṭimēl vīḻnta kiḻavaṉai neruṅki
30kātal eṅkaiyar kāṇiṉ naṉṟu eṉa
mātar cāṉṟa vakaiyiṉkaṇṇum
tāyar kaṇṇiya nal aṇip putalvaṉai
māyap parattai uḷḷiya vaḻiyum
taṉvayiṉ ciṟaippiṉum avaṉ vayiṉ pirippiṉum
35iṉṉāt tol cūḷ eṭuttaṟkaṇṇum
kāmakkiḻattiyar nalam pārāṭṭiya
tīmaiyiṉ muṭikkum poruḷiṉkaṇṇum
koṭumai oḻukkattut tōḻikku uriyavai
vaṭu aṟu ciṟappiṉ kaṟpiṉ tiriyāmai
40kāytalum uvattalum pirittalum peṭṭalum
āvayiṉ varūum pal vēṟu nilaiyiṉum
vāyiliṉ varūum vakaiyoṭu tokaii
kiḻavōḷ ceppal kiḻavatu eṉpa.