கம்பராமாயணம் 7313 · யுத்த 14.255
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆள் ஐயா- அரக்கரை ஆள்கின்ற ஐயா; உனக்கு அமைந்தன - உனக்குத் துணையாக அமைந்திருந்த படைகள் அனைத்தும்; மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை - பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து போயினமையைக் கண்டாய்; இன்று போய் நாளை போர்க்கு வா- இன்று உன் இலங்கையரண்மனைக்குச் சென்று, (மேலும் போர்புரிய விரும்பினால்) போர்க்கு நாளைக்கு வருவாயாக; என - என்று; நல்கினன் -(இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான்; (யார் என்னில்) நாகு இளங்கமுகின் - மிகவும் இளைய கமுக மரத்தின்மீது; வாளை தாவுறும் கோசல நாடுடை வள்ளல் - வாளை மீன்கள் தாவிப் பாயும் (நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான்.
இராவணன் நால்வகைப் படைகளின் அழிவிற்குப் பூளைப் பூவை உவமையாக்கினார். "காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடல் அரக்கர் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோவில்" (பெரிய திரு. 4:10:06) எனத் திருமங்கையாழ்வார் மொழிந்துள்ள உவமை தம் சிந்தை கவர்ந்தமையால், அவர் மொழியைப் பொன்னே போல் போற்றி, "மாருதம் அமைந்த பூளையாயின்” என்று மொழிந்தார். "பொங்குகோபம் சுடப்பூளை வீ என்ன (கம்ப. 339); "பூளை வீந்தெனப் போயின” (கம்ப. 5973) என மேலும் கூறுவார். தன் மனையாட்டியை வஞ்சித்து இன்னும் சிறை வைத்துள்ள மாபாதகன் நிராயுதனாகக் கண்முன் நிற்பது அறிந்தும், அவனைக் கொல்லாது, "இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என நவின்ற அருள் மனம் சான்றோர் பலரின் உள்ளங் கவர்ந்ததாம். இதுவே தழிஞ்சி எனும் புறப்பொருள் துறையாயிற்று. "அழியுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக் கழிதறுகண்மை காதலித்து உரைத்தன்று” (புறப், வெண். 72) என இதனை ஐயன் ஆரிதனார் போற்றுவார் பேராண்மை என்ப தறுகண்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று அதன் எஃகு" (குறள் 773) என வள்ளுவரும் போற்றுவார். இதற்கு, உரை வரைந்த பரிமேலழகர், "ஊராண்மை - உபகாரியாம் தன்மை. அஃதாவது இலங்கையர் வேந்தன், போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறை, மேற்செல்லாது, "இன்று போய் நாளை நின் தானையொடு வா” என விட்டாற்போல்வது” என்று, இந்த நிகழ்ச்சியைச் சுட்டி விளக்கந்தருவார் திருவாய் மொழிஈட்டில் இந்நிகழ்ச்சி நம்பிள்ளையின் உள்ளங்கவர்ந்துள்ளமையை கீழ்வரும் பகுதி காட்டுகிறது. இறைவன் உயிர்களை அழிக்க நினைப்பதில்லை; வாழ்விக்கவே விரும்புகின்றான்; அழித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் உயிரை, வேறு வழியின்றிக் கண்ணும் கண்ணநீருமாய் அழிக்கின்றான் என நம்பிள்ளை கூறும் பகுதி இது. "சிலரை அழியச் செய்ய” என்றால் ஆற்றல் இல்லாதவனாக இருக்கையைத் தெரிவித்தபடி, "இராவணன் தானே ஆகிலும் இவனை அழைத்து கொண்டுவாரும்” என்னுமவன் அன்றோ, கடலை அணை செய்து, ஊரை முற்றுகை இட்டு, பின்னை அங்கதப் பெருமாளையும் புகவிட்டு, கையிலே வந்து அகப்பட்டவனை, "இராட்சசேஸ்வரனான இராவணனை! போரில் அடிபட்ட நீ போ என்று அனுமதி தருகிறேன். இலங்கைக்குள் சென்று சிரமத்தைப் போக்கிக்கொண்டு, வில்லோடும் தேரோடும் கூடினவனாய் மீண்டும் வா; அப்போது தேரில் இருக்கிற நீ என் வலிமையைப் பார்ப்பாய்" என்று தப்பவிட்டது, இன்னம் ஒருகால் அவன் மனம் திருந்தி, தவறு உணர்வானோ என்ற ஆசையால், அவன் அதர்மத்தில் முற்றி நின்று அழிந்தே தருவேன் என்று மறுநாளும் வந்தபோது கண்ணும் கண்ணநீருமாய் அன்றோ கொன்றது” (திருவாய்: (ஈடு. 9:2:10) வீடணனேயாயினும் இராவணனே ஆயினும் அழைத்துக் கொண்டு வா என்று கருணை அலையெறியக் காத்திருக்கிறான் அவன். "நான் இரண்டு துண்டாக வெட்டுப் படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கமாட்டேன்” என்னும் உறுதியோடு நிற்கில, முடித்து விடுவான்” (திருவாய். ஈடு 1:7:10) என்பது நம்பிள்ளையின் திருவாக்கு. எல்லாத்தானத்திலும் சிறந்தது உயிரைக் கொடுத்தலாம். அப்பெறற்கரும் உயிரைக் கொல்லக் காரணம் பல இருந்தும் அவனுக்குத் தானமாகத் தந்தான் ஆதலின், "வள்ளல்" என்றார். எளிய வாளை, உயர்ந்த கமுகின் மேல் அஞ்சாது தாவி மோதும் எனக் கோசல நாட்டில் நில நீர்வளம் குறிப்பினும், அந்நாட்டு அஃறிணைப் பொருள்களே அத்தன்மையினை யுடையவையாயின், அந்நாட்டுத் தலைவன் அஞ்சுவனோ! என்னும் குறிப்புப் பொருளையும் கொண்டு நின்றது "நாகிளங்கமுகின் வாளை தாவுறும் கோசல நாடுடை வள்ளல்" என்னும் தொடர் இராவணன் ஒருகால் நல்லுணர்வுற்று சீதையைத் தந்து சரண்புகுவான் எனில், இலங்கையரசினைப் பெருமான் முன்பே வீடணனுக்குத் தந்து விட்ட நிலையில், அயோத்தி நகரத்தை இராவணனுக்குத் தருங் கருத்தை இராமபிரான் கொண்டிருந்தான் எனுங்கருத்தில், "கோசல நாடுடை வள்ளல்” எனக் குறித்தார் நல்கினன் வள்ளல் எனும் சொல்லாட்சியினையும் உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Ruler, sir! Those that stood with you have become, as you have seen, like pūḷai flowers
- struck by the gale; go now for today, and to battle
- come tomorrow,' so granted he, the bountiful lord of the Kōcala land, where on the tender young areca palms
- the vāḷai fish leap.
What the poem says
The famous close of the first day's battle. Seeing Irāvaṇaṉ alone, unarmed and uncrowned, his armies scattered like fluffy pūḷai flowers in a gale, Irāmaṉ does not kill him but says: go home today and come back to fight tomorrow. Tamil commentators have long admired this as the highest kind of heroism, mercy to a helpless enemy; the Tirukkuṟaḷ commentator Parimēlaḻakar cites this very scene, and Vaiṣṇava teachers saw in it the Lord's wish to save rather than destroy, still hoping Irāvaṇaṉ would repent.
Irāmaṉ is called 'the bountiful one' because he gives his enemy the greatest gift, life itself. The image of fish leaping onto areca palms in his fertile homeland, Kōcalam, hints that in his country even humble creatures are fearless; how much more its king.