கம்பராமாயணம் 82 · பால 3.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செவ்விய - செம்மையானவையும்; மதுரம் சேர்ந்த - இனிமை பொருந்தியவையும்; நல் பொருளின் சீரிய - கூறும் நல்ல பொருளால் சிறந்தவையும்; கூரிய - நுட்பமானவையும் ஆகிய; தீம்சொல் - இனிய சொற்களை; வவ்விய - கவர்ந்து கொண்ட, கவிஞர் அனைவரும் - (தமிழ்) கவிஞர்களாலும் - யாவராலும்; வடநூல் முனிவரும் - வடமொழியில் வல்ல வான்மீகி முதலான முனிவர்கள்; புகழ்ந்தது - புகழப்பட்டது (அயோத்தி நகரம்); மேலும்; வரம்பு இல் எவ் உலகத்தோர் யாவரும் - அளவற்ற உலகங்கள் எல்லாவற்றிலும் வாழ்கின்றவர்கள் எல்லோரும்; தவம் செய்து ஏறுவான் - தவங்களைச் செய்து அடைவதற்கு; ஆதரிக்கின்ற - விரும்புகின்ற, அவ் உலகத்தோர் - அந்தப் பரமபதமாகிய வீட்டு உலகத்தவர்களும்; இழிவதற்கு - பிறப்பதற்கு; அருத்தி புரிகின்றது - (தகுந்த நகரம்) இது என்னும் விருப்பத்திற்கு உரியது; அயோத்தி மாநகரம் - அயோத்தியாகிய பெருமைக்குரிய நகரமேயாகும்.
இராம கதையைப் பாடிய தமிழ்ப் புலவர்களும் வான்மீகி முதலான வடநூல் முனிவர்களும் புகழ்ந்தது அயோத்தி நகரையே. எல்லா உலகங்களிலும் வாழ்வோர் யாவரும் அருந்தவம் செய்து முடிவாக வீடு பேறு பெறவே விரும்புவர்; அவர்களும் அங்கே சென்றபிறகு அதனை விடவும் பெருமை மிக்கது அயோத்தியே என்று உணர்ந்து, அங்கே அவதாரம் செய்ய விரும்புவர். அந்த அளவுக்குப் பெருமை உடையது அயோத்தி நகரம் - இது செய்யுளின் இரண்டு கருத்து.
'கவிஞர்' என்றது "இராமாயணம் பாடிய சங்கப் புலவர் முதலியோர்" என்பது ஐயரவர்கள் குறிப்புரை. (ஐயரவர்கள் நூலகத்தின் கம்பராமாயணப் பதிப்பு - பாலகாண்டம் - பக். 45). சங்க காலத்து ஓர் இராமாயணம் வழங்கியதைத் தொல்காப்பிய உரை முதலியவற்றால் உணரமுடிகிறது. அதனை பாடியவர்களை நினைந்து கம்பர் கூறியதாக ஐயரவர்கள் குறிப்பிடுகிறார்கள் வடநூல் முனிவர் என்றது இராமாயணத்தை வடமொழியில் பாடிய வான்மீகி, வசிட்டர், போதாயனர் முதலியோரை (10)
இதே படலத்துள் மேலே இரு பாடல்களில் (97, 98) இக்கருத்தை இராமபிரான்பால் சார்த்தி அயோத்தியின் சிறப்பைக் கவிச்சக்கரவர்த்தி விளக்குதல் காண்க. "புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்.... எண்ணருங் குணத்தின் அவன் (இராகவன்... இனிது இருந்து ஆள் இடம் என்றால் ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்" (97). "யாவர்க்கும் புகலிடம் ஆன செங்கண் மால் பிறந்து அளப்பருங் காலம் திருவின் வீற்றிருந்தனன்" என்றார்; "அங்கண்மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ" (98) இவ்விரு பாடல்களின் தொடர்கள் இம்முதற் பாடலுக்கு ஆழமான பொருள் காண உதவுவன.
நல்ல கவிதைக்கு உரிய இயல்புகளை முற்றிலும் கொண்ட கவி நாயகராகிய கம்பர் பல இடங்களில் நற்கவிதை மற்றும் மா கவிதையின் இயல்புகளைக் கூறுவார் அவற்றுள் இஃது ஓர் இடம். கவிதைக்கு இன்றியமையாதவை இனிய சொற்கள்; அந்தச் சொற்களிலே அழகு இருக்க வேண்டும்; அழகு என்பது பல்வகைச் செம்மையால் அமைவது. அழகோடு இனிமை சேர வேண்டும். செம்மையும் இனிமையும் மட்டும் போதா; சொல்லப்படும் பொருளும் நல்லதாக இருக்கவேண்டும். செம்மை, இனிமை, நற்பொருள் இவற்றைக் கொண்டுதரும் சொற்கள் சீரியனவாய், நுட்பம் சுட்டும் கூர்மை கொண்டனவாய் இருத்தலும் இன்றியமையாதது. 'செவ்விய, மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய தீம் சொல் வவ்விய கவிஞர்' என்ற தொடர் கொண்டே சிறந்த இலக்கியத் திறனாய்வையும் இலக்கியக் கொள்கையையும் உருவாக்கலாம். 'மாண்டு பிறக்கும் துயர் போய் வைகுந்தம் புக்கவரும் மீண்டும் தொழக் காதலிக்கும் வேங்கடமே' என்ற திருவேங்கடமாலைச் செய்யுளில் இப் பாடலின் கருத்தைப் பிள்ளைப் பெருமாளையங்கார் அமைத்திருப்பது கருதத்தக்கது. (திருவேங்கடமாலை 1/0)
தொல்காப்பியப் புறத்திணையியல் (தொல் - பொருள் புறத். 21) நூற்பாவில் சுட்டப்படும் 'கட்டில் நீத்த பால்' என்ற துறைக்குப் பரதன் அரியாசனம் துறந்த செய்தி கொண்ட பாடல் எடுத்துக்காட்டப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இராமகாதைச் செய்திகள் யாவரும் அறிந்தன.
கம்பரை யன்றி அயோத்தியைப் புகழ்ந்த தமிழ்ப் புலவர் பிறர் கம்பருக்கு முன்னர் வாழ்ந்தனரோ என்ற தடை எழுதற்கு இடம் உண்டு. அத் தடைக்கு விடை வருமாறு: கம்பர் காலத்துக்கு நெடுங்கால முன்பே தமிழர்க்கு இராம கதை அறிமுகமானதுதான். ஊன்பொதி பசுங்குடையார் பாடிய பாடாண் திணைப்பாடல் ஒன்றில் கிட்கிந்தா காண்ட நிகழ்ச்சி ஒன்று காணப்படுகின்றது. இராவணனால் சிறை எடுத்துச் செல்லப்பட்டபோது சீதை கழற்றி எறிந்த அணிகலன்களின் நிலை அறியாத வானரங்கள் முறை மாற்றி அவற்றை அணிந்து பார்த்ததாக அச் செய்யுள் தெரிவிக்கின்றது. (புறநானூறு 378). தென்கோடி (தனிக்கோடி) யில் அணை அமைத்துக் கடல் கடந்து செல்லுமுன் ஆல மரம் ஒன்றின்கீழ் அமர்ந்து இராமன் தன்னவரோடு நிகழ்த்திய மந்தணப் பேரவை பற்றி மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் குறிப்பிடுகிறார் (அகநானூறு 70). இப்படி உதிரி நிகழ்ச்சிகளே யன்றி இராமன் கதையை முழுமையாகப் பாடிய நூல்களும் இருந்திருக்கவேண்டும் என்ற குறிப்பும் கிடைக்கிறது. "கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்" (தொல். புறத். 12) என்ற துறைக்கு விளக்கம் எழுதும்போது, "இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது" என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார் கம்பர் காலத்துப் பழைய தமிழ் இராமாயண நூல்கள் வழக்கில் இருந்து, அவற்றை அவர் பயின்றிருக்கவேண்டும். அந் நூல்களில் தமிழ்க் கவிஞர்கள் அயோத்தியின் சிறப்பைப் பாடியதை அறிந்தே கம்பர் 'கவிஞர் புகழ்ந்தது' என்று நகரப் படலத்துள் குறித்திருப்பார்
ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் கம்பருக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு என்பது யாவர்க்கும் ஏற்புடைய கருத்து. ஆழ்வார்கள் வாக்கில் பதின்மூன்று இடங்களில் அயோத்தி குறிக்கப்படுகிறது. (பெரியாழ்வார் 32, 34, 3/6, 321, 325, 399; குலசேகராழ்வார் 724, 725, 741, 748, தொண்டரடிப் பொடியாழ்வார்; திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் 2788). இவற்றுள், எட்டு இடங்கள் அயோத்தியைப் பெயரளவில் குறிக்கின்றன. ஏனைய ஐந்தும் சுருக்கமான விளக்கம் தந்து அயோத்தியை ஒருவாறு சிறப்பிக்கின்றன. தேர் அணிந்த அயோத்தி (321), அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தி என்னும் நகரம் (741), அம்பொன் நெடுமணிமாட அயோத்தி (748), தவளமாடம் நீடு அயோத்தி), நற்பால் அயோத்தி (2788). அருளிச் செயல்களில் அயோத்தி பற்றிய குறிப்புகள் இவ்வளவே. மறைந்து போன - கம்பர் கண்டிருக்கக் கூடிய - தமிழ் இராமாயணங்களில் விரிவான வருணனை இருந்திருக்க வேண்டும்.
வடமொழியில் கம்பர் குறித்த மூவர் இராமாயணங்களில் வான்மீகம் ஒன்றே கிடைப்பது. அதில் அயோத்தி வருணனை உண்டு. "அந்த நாட்டின் (கோசலம்) தலைநகரம் அயோத்தி. மனு என்னும் புகழ்பெற்ற சூரியகுல அரசனால் நிர்மாணிக்கப்பட்ட நகரம். மிக்க அழகும் புகழும் பெற்ற நகரம்.
வால்மீகி வருணித்திருப்பதைப் படித்தால், தற்கால ராஜதானி நகரங்களுக்கு எந்த விதத்திலும் அயோத்தி குறைந்ததாகத் தோன்றவில்லை" என்ற கணிப்பு வான்மீகர் புகழ்ந்த அயோத்தியை விளக்கப் போதுமானது. (சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார்: இராமாயணம் பக. 18) அயோத்தி என்றசொல் போரால் (யுத்தத்தால்) பற்றமுடியாதது என்னும் பொருள் உடையது. மதுரை நகரத்து வாயிலைப் போரருவாயில் என நக்கீரனார் குறிப்பது ஒப்பிடத்தக்கது.
நல்ல கவிதைக்கு உரிய இயல்புகளை விளக்கும் இலக்கியக் கொள்கையைத் துலக்குவதற்கும் இலக்கியத் திறனாய்வு மேற்கொள்ளுதற்கும் தமிழ்க் கவிஞர் இயல்பினை விளக்கும் இச் செய்யுளின் முதற்பகுதி ஒரு கட்டளைக் கல்லாக அமைகிறது எனலாம். செம்மை வடிவு, இனிய ஓசை விழுமிய நுவல் பொருட் சீர்மை: இவை நற்கவிதைக்கும் பெருங்கவிதைக்கும் இன்றியமையாதன. செப்பமான சொல்லும் இனிய ஓசையும் பயன்கொண்டு நிரப்புவது நற்பொருளிலே தான். கொச்சையும் சிதைவும் இல்லா நுட்பமான கூர்மை, விளையும் பயனால் இனிமை, இவை கவிதைச் சொற்களின் கட்டுக்கோப்பைப் புலப்படுத்துவன. செவ்விய, மதுரம் சேர்ந்த, நற்பொருளின் சீரிய, கூரிய: என்ற வினையாலணையும் பெயர்கள் இங்கே திட்ப நுட்பம் சிறந்தனவாய் இலக்கிய இயல் புலப்படுத்தும் சூத்திரங்களாய் பொலிகின்றன. சொல்லுக்கு விளக்கம் தருவாராய்க் கவிதை இயல் தெளிவுபடுத்தினார், கவிச்சக்கரவர்த்தி.
நல்ல சொல் கருத்தில் தலைகாட்டும் போதே கவிஞரின் உணர்வும் கலைத்தூண்டிலால் விரைந்து பற்றுவதை 'வவ்விய கவிஞர்' என்ற தொடர் புலப்படுத்துகிறது.
அவ் உலகம்: இதில் அகரம் சேய்மைச் சுட்டு. எட்டாத ஒன்றோ என்று கவலைப்படுமளவுக்குத் தொலைவான இலட்சியம் என்பதைச் சேய்மைச் சுட்டு விளக்குகிறது. இதன் நுட்பத்தைக் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு பின்வருமாறு விளக்குகிறார்: "அவ்வுலகம் எனச் சேய்மைச் சுட்டாற் கூறினமையால், தவஞ்செய்யாதார் ஏற ஆதரித்தல் கூடாது என்னும் அருமை தோன்றா நின்றது. அத்தன்மையது பரமபதமே யாதலால் அவ்வுலகம் என்றதற்குப் பரமபதம் என்று பொருள் கூறப்பட்டது. அவ்வுலகத்துள்ளார் நிரதிசயாநந்திகளாதலால் வேறுலகத்தில் விருப்பம் வையாரென்பது தோன்ற அருத்தி புரிகின்றது என்றார்."
உபய விபூதி நாயகன் பூர்ண கலையோடு திவாகரனாய் அவதரித்த இடமாதலால் திரு அயோத்தியை மாநகரம் என்றார்.
எவ்வுலகமும் என்ற தொடரமைப்பு வினாப் பொருளது அன்று. (உம் சேர்ந்தமையால் எஞ்சாமைப் பொருட்டு.
அயோத்தி - யுத்தத்தால் பிறர் கைப் புகாதது. 'கன்னி மாமதில்' என்பதும், 'போரருவாயில்' என்பதும் இப்பொருளவே.
'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' (97) எனவும், 'யாவர்க்கும் புகலிடமான செங்கண் மால் பிறந்து ஆண்டு அளப்பருங்காலம் திருவின் வீற்றிருந்தனன் என்றால் அங்கண்மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ' (98) எனவும் மேல்வரும் தொடர்கள் இங்கு இணைத்து நோக்கத் தக்கன.
யாவர்க்கும் புகலிடமான திருமாலே அவதரிக்கத் தேர்ந்த இடமாதலின் மா நகரம் என்றார். இங்கு மா என்னும் பல பொருளொரு சொல் அளவையும் பரப்பையும் குறியாமல் பெருமையை - மாண்புடைமையைக் குறித்தது. புகழ்ந்தது புரிகின்றது..... அயோத்தி என வினைமுற்று இரண்டாய், அயோத்தி என்ற பெயர் கொண்டு முடிந்தது. யாவரும்: முற்றும்மை. அவ்வுலகத்தோர் என்பதில் தொக்க உம்மை உயர்வு சிறப்பும்மையாம். இழிவதற்கு: இறங்குவதற்கு இங்கே மேனிலையிலிருந்து கீழ் இறங்கி வருதல் என்னும் பொருளுடைய 'அவதாரம்' என்ற வடசொல்லுக்கு நேர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Words well-formed and joined with sweetness, choice in their good meaning, keen and sweet:
- all the poets who have seized on such words, and the sages of the northern books, have praised it; and of the boundless
- worlds, though the beings of every one long to climb by penance
- to that world, those who dwell there yearn to come down to it: the great city of Ayōttī.
What the poem says
The Chapter of the City opens with praise of Ayōttī (Ayodhyā), capital of Kōcalam. The finest poets, whose words are polished, sweet, rich in meaning and sharp, have celebrated it, and so have the Sanskrit sages such as Vālmīki. The beings of every world perform austerities in the hope of reaching Vishnu's highest heaven. Yet those who already live in that heaven long to come down and be born in Ayōttī, and the Lord himself chose it for his descent as Irāmaṉ.
The first half of the verse is often read as Kampaṉ's own statement of what poetry should be: well-formed, sweet, meaningful, refined and keen. The "poets" may include earlier Tamil tellers of the Rāma story, known from scattered references in Caṅkam poems and old commentaries. The name Ayōttī was understood to mean "the city that cannot be taken in war".