தொல்காப்பியம் 1095 · பொருள் 4.10
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in TamilAI
தலைவன் தலைவியிடமும் தம்மிடமும் மாறிமாறிச் செல்வதால் தோன்றும் புலவி, மனையில் உள்ளோர் செயலை இகழ்தல், தலைவனின் பல புதல்வரைக் கண்டு மகிழ்தல், களவின் வழியே வந்த மனைவியின் செயலால் பொறுக்க இயலாமல் பெருகும் துன்பம், தலைவன் காதல் குறைந்தபோது மனைவி கடமை உணர்வால் தாய்போல் தழுவிக் கடிந்து காமக்கிழத்தியைச் சினமின்றித் தலைவனோடு பொருத்துதல், இனிய நகையுடைய புதல்வனை அணிசெய்து மனைவி பின்னர் வாயிலாக அனுப்புதல், மனைவியைத் தானும் ஒத்தவள் எனக் கருதித் தன்னைப் போன்ற பிறரை மிகை எனக் கொள்ளும் கொள்கை, ஆறு, குளம், காவில் ஆடும் விளையாட்டு ஆகிய இவையும் பிறவும் காமக்கிழத்தியருக்கு உரிய கூற்றுகள்.
இளம்பூரணர்
காமக்கிழத்தியர் என்பவர் தலைவியை மணந்த பின் தலைவன் விருப்பால் மணந்த, ஒத்த குலத்தவர், தாழ்ந்த குலத்தவர், மணந்த பரத்தையர் என மூவகையினர் என்பார்.
நச்சினார்க்கினியர்
காமக்கிழத்தியரைப் பல பருவத்தினர் எனக் கொண்டு, மணந்த பரத்தையரை அவருடன் சேர்ப்பது பொருந்தாது என்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the sulk that confounds embracing;
- in scorn for the doings of those of the house;
- if she rejoices greatly at seeing his many sons;
- at the doings of the wife who came by way of secret love,
- in the distress that grew beyond bearing;
- when, his love waning, in the manliness of duty,
- embracing and chiding the wife like a mother,
- in reconciling her to him without anger;
- embracing the sweet-smiling son, putting on jewels,
- in the go-between who came afterwards;
- in the stance that, being equal to the wife, deems her
- own kind and those like them superfluous;
- the pastimes reckoned: with these and others,
- these belong to the concubines who are held in esteem.
What the poem says
The utterances of the kāmakkiḻattiyar, the "women of desire", secondary wives or concubines. Iḷampūraṇar defines them as women the hero takes after marrying the heroine, out of desire: of family equal to his, of lower family, or courtesans (parattaiyar) whom he has married; courtesans proper, who sell pleasure and belong to no one, are outside the term, though their speeches are classed with these.
The items, as Iḷampūraṇar reads them: the sulk when the hero, sharing himself between the wife and them, confuses his embraces; scorn for the doings of the household, the hero and the wife (Kuṟuntokai 8, the famous "like a puppet that moves as its master wills"); great joy at seeing his sons; distress at what the wife, who came through kaḷavu, does; when the husband's love wanes, the wife, out of duty, embraces and chides her rival like a mother and reconciles her to him; when the wife sends her little son, adorned, as a go-between; the concubine thinking herself equal to the wife and others like herself superfluous; and the pastimes of bathing in river, tank and grove.
Nacciṉārkkiṉiyar takes kāmakkiḻattiyar more widely, as women of various ages who live as the hero's acknowledged partners and run households, and rejects the view that married courtesans should be classed with them. He reads the first item as the sulk caused when the hero's dalliance is hidden from them.
உரை · Commentary
இளம்பூரணர்
என்—எனின், காமக்கிழத்தியர் கூற்று நிகழும் இடம் உணர்த்திற்று.
புல்லுதன் மயக்கும் புலவி முதலாகச் சொல்லப்பட்ட இடத்தினும் அந்நிகரன பிறவிடத்தினும் குறிக்கப்பட்ட கூற்றுக் காமக்கிழத்தியர் மேலன என்றவாறு.
கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது.
காமக்கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர்; ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப்பட்டாரும் என. ஒத்த கிழத்தியர் — முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல். இழிந்தாராவார்—அந்தணர்க்கு அரசகுலத்தினும் வணிககுலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு ஏனையிரண்டுகுலத்தினுங் கொடுக்கப்பட்டாரும், வணிகர்க்கு வேளாண்குலத்திற் கொடுக்கப்பட்டாரும். வரையப்பட்டார்—செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர், கன்னியில் வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர்பாற் பட்டனர். பரத்தையராவார் யாரெனின், அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகுமிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார். இவருள்ளும் ஒருவரைப் பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார்த்திக் கூறுவனவும் காமக்கிழத்தியர் கூற்றின்பாற் படும். இவற்றின் வேறுபாடு அவரவர் கூற்றானறிக. இச்சூத்திரத்திற் காமக்கிழத்தியென ஓதாது ‘கிழத்தியர்’ என ஓதுதலானும் பலவகையார் என்பது கொள்க.
புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் என்பது—புல்லுதலைக் கலக்கும் புலவிமாட்டுங் காமக்கிழத்தியர் கூற்று நிகழும் என்றவாறு.
அஃதாவது முதிராத புலவிமாத்திரமாகிய புணர்ச்சியை யுடன்பட்ட நெஞ்சத்தளாதல்.
“பொது மாழி………ஐய எமக்குநின் மார்பு.” (கலித். 68)
இது மூவகையார்க்கும் பொது.
இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் என்பது—மனையகத்தோர் செய்த வினையை யிகழ்ந்து கூறுதற்கண்ணும் என்றவாறு.
பன்மையால் தலைமகனை யிகழ்தலுந் தலைமகளை யிகழ்தலுங்கொள்க.
“கழனிமாஅந்து ………புதல்வன் தாய்க்கே” (குறுந். 8)
என்றும்,
“நன்மரங்………யாடியாரே” (அகம். 166)
என்றும் வரும். இவை தலைவனை இகழ்ந்தன.
“அளியர் தாமே………பெரும்பேதையரே” “எரியகைந் தன்ன………அலைஇயர் தன்வயிறே”. (அகம் 106)
இவை பரத்தை கூற்று.
பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும் என்பது—பலவகைப் புதல்வரைக் கண்டு மிகவும் உவந்து கூறியவழியுமென்றவாறு.
“நயந்தலை………கோதை பரிபாடக் காண்கு’ (கலித். 80)
என வரும்.
மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் என்பது—களவின் வருகின்ற மனையோள் செய்வினை பொறையின்றிப் பெருகிய துன்பத்தின் கண்ணும் என்றவாறு.
“வாளை………தொலையுந பலவே.” (நற்றிணை. 390)
இது, பரத்தையராகி வந்த காமக்கிழத்தியர் கூற்று.
காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற் கழறித் தழீஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற்கண்ணும் என்பது—காதற் சோர்வினாலும் ஒப்புரவுடைமையானுந்தாய்போற் கழறிப் பொருத்தப்பட்ட மனைவியைக் காய்தலின்றித் தலைமகன்மாட்டுப் பொருத்தற்ண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.
இதுவும் அவள் கூற்று. காதற்சோர்வு என்பது, தன்மாட்டுக, காதல் சோர்தல். இது தலைமகன் மாட்டுத் துனியுளவழி நிகழும் நிகழ்ச்சி.
“வயல்வெள் ………மகனென் னாரே.” (நற்றிணை. 290)
இது காமக்கிழத்தியாகிய தலைமகட்கு முன் வரையப்பட்ட பரத்தை கூற்று.
இன்னகைப் புதல்வனைத் தழீஇ யிழையணிந்து பின்னை வந்த வாயிற் கண்ணும் என்பது—இனிய நகையையுடைய புதல்வனைத் தழீஇ இழையணிந்து பின்னை வந்த வாயிலின் கண்ணும் என்றவாறு. பின்னை என்றதனால் ஏனைய வாயில்களை மறுத்த வழியென்று கொள்க.
“புள்ளிமிழ்………ஈங்கெம் புதல்வனைத் தந்து” (கலித் 79)
என வரும்.
மனையோள் ஒத்தலின் தன்னோரன்னோர் மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணும் என்பது—தான் மனையாளை ஒத்தலாற் றன்போல்வார் தலைவற்கு மிகையெனக் குறித்த கோளின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
“அரிற்பவர்ப்………துஞ்சு நாளே” (குறுந். 91)
என வரும்.
எண்ணிய பண்ணையென் றிவற்றோடு என்பது—எண்ணப்பட்ட விளையாட்டு என்று சொல்லப்பட்ட இவற்றோடென்றவாறு.
விளையாட்டாவது ஆறுங் குளனுங் காவும் ஆடுதல்.
“கூந்தலாம்பல்………கொழுநன் மார்பே” (குறுந். 80)
பிறவும் என்றதனால் தலைமகட்குரித்தாகச் சொல்லப்பட்டவற்றுள் ஒப்பன கொள்ளப்படும். அவற்றுட் சில வருமாறு:—
“ஞாலம் வறந்தீர” என்னும் மருதக்கலியுள்,
“அடக்கமில் போழ்தின்கண் தந்தைகா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்”
எனவும்,
“வழிமுறை தாயுழைப் புக்கான்”
எனவும்,
“தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றிஃதோர் புலத்தகைப் புத்தேளிற் புக்கான்” (கலித். 82)
எனவும்,
கூறுதலிற் புதல்வனை யீன்றாள் மூன்றாங் காமக்கிழத்தி யாயினவாறும் இவன்மாட்டுத் தாயர்கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப்பரத்தை யுள்ளிக் கூற்றுநிகழ்ந்தவாறுங் கண்டுகொள்க. பிறவும் அன்ன. தோழி கூற்றும் இவட்கும் ஒக்கும்.
நச்சினார்க்கினியர்
இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது; காமக்கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக்கிழமைபூண்டு இல்லறநிகழ்த்தும் பரத்தையர் அவர் பலராதலிற் பன்மையாற் கூறினார். அவர் தலைவனது இளமைப்பருவத்திற்கூடி முதிர்ந்தோரும், அவன் தலைநின்றொழுகப்படும் இளமைப்பருவத்தோரும், இடைநிலைப் பருவத்தோருங் காமஞ்சாலா இளமையோருமெனப் பல பகுதியராம். இவரைக் ‘கண்ணிய காமக்கிழத்திய’ ரெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடையராகி வருஞ் சேரிப்பரத்தையருங் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவலபாங்கினரும் பிறருமாம். இனிக் காமக்கிழத்தியரைப், பார்ப்பார்க்குப் பார்ப்பனியை யொழிந்த மூவரும், ஏனையோர்க்குத் தங்குலத்தரல்லாதோரும், வரைந்து கொள்ளும் பரத்தையருமென்று பொருளுரைப்பாரும் உளர். அவர் அறியார்; என்னை? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங் கூட்டிக் காமக்கிழத்தியரென்று ஆசிரியர் சூத்திரஞ் செய்யின் மயங்கக்கூறலென்னுங் குற்றந் தங்குமாதலின். அன்றியுஞ் சான்றோர் பலருங் காமக்கிழத்தியரைப் பரத்தையராகத் தோற்றுவாய்செய்து கூறுமாறும் உணர்க.
(இ-ள்) புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் - தலைவன் தனது முயக்கத்தைத் தலைவியிடத்துந் தம்மிடத்தும் இடைவிட்டு மயக்குதலால் தலைவிகண் தோன்றிய புலவியிடத்தும், காமக்கிழத்தியர் புலந்து கூறுப.
“மங்கனை…………சூழ்ந்திசின் யானே.” (அகம். 76)
இதனுள் எஞ்சேரி வந்தெனக் கழறுபவென்ப அவன் பெண்டிரென முன்னைஞான்று புல்லுதன் மயக்குதலால் தலைவி புலந்தவாறும் அதுகண்டு காமக்கிழத்தி கொண்டுகைவலிப்பலெனப் பெருமிதம் உரைத்தவாறுங் காண்க.
இது, பெருமிதங்கூறலின் இளமைப்பருவத்தாள் கூற்றாயிற்று.
“ஒண்டொடி யாயத் துள்ளுநீ நயந்து கொண்டனை யென்பவோர் குறுமகள்’ (அகம். 96)
எனக் காமஞ்சாலா இளமையோளைக் கூறிற்று.
இரட்டுற மொழிதலென்பதனாற் பரத்தையரிடத்துப் புலப்பட ஒழுகாது அவர் புல்லுதலை மறைத்தொழுகுதலாற் காமக்கிழத்தியர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்று நிகழுமெனவும் பொருள் கூறுக.
“கண்டேனின் மாயங்களவாதல்பொய்ந்நகா” (கலி. 90) என்னும் மருதக்கலியுட் காண்க.
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் - இல்லிடத்திருந்த தலைவனுந் தலைவியும் ஊடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக்கேட்டு இகழும் இகழ்ச்சிக்கண்ணும் :
‘கழனிமாத்து’ (குறுந்-8) “நன்மரங்” (அகம் 166)
எனவரும் இவையும் இளையோர் கூற்று பிறவும் அன்ன.
பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும் — வெவ்வேறாகிய புதல்வரைத் தாங்கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும்
“வேறுபல் புதல்வ” ரென்றார், முறையாற்கொண்ட மனைவியர் பலரும் உளராதலின்.
‘ஞாலம் வறந்தீர’ என்னும் மருதக்கலியுள்,
“அடக்கமில் போழ்தின்கண் தந்தைகா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும் மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து பெருமா னகைமுகங் காட்டென்பாள் கண்ணீர் சொரிமுத்தங் காழ்சோர்வ போன்றன.” (கலி. 82)
இது, முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது.
‘மற்றும் வழிமுறைத் தாயுழைப் புக்காற் கவளும் மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே நினக்கியாம் யாரே மாகுது மென்று வனப்புறக் கொள்வன நாடி யணிந்தனள் (கலி. 82)
இதனுள் நோய்தாங்கினளென இளமைப்பருவத்து மகிழ்ச்சியும் முதிர்ந்த பருவத்து மறவியுந் தோன்றக் கூறாமையினானும் வழிமுறைத்தா யென்றமையானும் இஃது இடைநிலைப் பருவத்தாள் கூற்று.
“அவட்கினி தாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர் புலத்தகைப் புத்தேளில் புக்கான்” (கலி. 82)
என்றவழிப் ‘புத்தே’ளென்றதுவுந் தலைநின்றொழுகும் இளையோளைக் கூறியது.
“தந்தை யிறைத்தொடீஇ மற்றிவன் றன்கைக்கண் தந்தாரியா ரெல்லாஅ விது இஃதுதொன்று.” (கலி. 84)
என்றாற்போல அவள் கொடுப்பக்கொள்வனவுங் கொள்க.
(மறையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெருகிய பருவரற்கண்ணும்) மறையின் வந்த-தலைவற்கு வேறோர் தலைவியோடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறுபாட்டால் தமக்குப் புலப்பட வந்த; மனையோள் செய்வினை-மனையோளாதற்குரியவள் தமர்பணித்தலிற் றைந்நீராடலும் ஆறாடலும் முதலிய செய்தொழில்களைச் செய்யுமிடத்து; பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்-இவள் தோற்றப்பொலிவால் தலைவன் கடிதின் வரைவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத்தின்கண்ணும்:
“வாளைவாளிற்…தொலையுந பலவே.” (நற்றிணை, 390)
இதனுள், விழவிற்செல்கின்ற தலைவியைக் கண்டு காமக்கிழத்தி இவள் தோற்றப்பொலிவோடு புறம்போதரக் காணின் வரைவனெனவும், அதனான் இல்லுறைமகளிர் பலருந் தோள் நெகிழ்பவெனவும் பொறாது கூறியவாறு காண்க.
(காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் தழீஇக் கழறி அம் மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும்) காதற் சோர்வில்-தானுங் காய்தற்குரிய காமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலானும்; கடப்பாட்டாண்மையிற் சோர்வில்—அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மையானும்; தாய்போல் தழீஇக் கழறி—தலைவியைச் செவிலிபோல உடன்படுத்திக் கொண்டு தலைவனைக் கழறி; அம் மனைவியைக் காய்வின்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும்—அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும்:
இது, துனிநிகழ்ந்துழித் தலைவனது தலைவளரிளமைக்கு ஒருதுணையாகி முதிர்ந்த காமக்கிழத்தி இங்ஙனங் கூட்டுமென்றார்.
“வயல்வெள் ளாம்பல்………என்னாரே” (நற்றிணை. 290)
இதனுள் நீ இளமைச்செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்றெனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்தவேண்டும் நீ அவள் அவனோடு கட்டில்வரை எய்தியிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே, கொள்வது நின் இளமைக்கும் எழிற்கும் ஏலாதெனவும், அவனை வண்டென்பதன்றி மகனென்னாராதலின் அவன் கடப்பாட்டாண்மை அதுவென்றுங் கூறினாள்.
இனி “என்சொற் கொள்ளன்மாதோ” (நற்றிணை 290) என்பதற்கு என்வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க.
“ஈண்டுபெருந் தெய்வத்……நின்னயந்தோரே” (நற்றிணை. 315)
இதனுள் மூத்துவினை போகிய அம்பிபோலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப்போலாது இவள் இப் பருவத்தே இனையளாகற்பாலளோ மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப்போல எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க.
(இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து பின்னர் வந்த வாயிற்கண்ணும்) இன்நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து-கண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல்வனை எடுத்துப் பொலங்கலத்தாற் புனைந்து கொண்டு : பின்னர் வந்த வாயிற்கண்ணும் — பல வாயில்களையும் மறுத்த பின்னர் வாயிலாகக்கொண்டு புகுந்த வாயிலின் கண்ணும்:
என்குறித் தனன்கொல் பாணநின் கேளே வன்புறை வாயி லாகத் தந்த பகைவரு நகூஉம் புதல்வனை நகுவது கண்டு நகூஉ மோரே”
இதனுள் வன்புறை வாயிலாகிய புதல்வனைக் கண்டு நகுவாரைத் தனக்கு நகுவாரைப்போல நகாநின்றானெனக் காமக்கிழத்தி கூறி வாயில் நேர்ந்தவாறு காண்க, ‘பகைவரும் நகூஉ’ மெனவே தான் புலக்கத்தகுந் தலைவியர் புதல்வனென்றாளாயிற்று.
(மனையாள் ஒத்தலில் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்) மனையோள் ஒத்தலில் - தானும் உரிமை பூண்டமைபற்றி மனையோளோடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின்; தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் - தன்னை ஒக்கும் ஏனை மகளிரின் தன்னை விசேடமுண்டாகக் குறித்துக்கொண்ட கோட்பாட்டின் கண்ணும்:
“குழற்காற் சேம்பின் ………… நேரிறை முன்கை வீங்கியவளையே.” (அகம். 336)
இதனுள் யான் அவண் வாராமாறே எனத் தான் மனையோளைப்போல் இல்லுறைதல் கூறி யாண்டுச் செல்லிற் சுடரோடு திரியும் நெருஞ்சிபோல என மகளிரை யான் செல்வுழிச் செல்லுஞ் சேடியர் போலத் திரியும்படி பண்ணிக் கொள்வலெனக் கூறியவாறு காண்க.
எண்ணிய பண்ணை - தலைவற்குத் தகுமென்று ஆய்ந்தயாறுங் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வனபோல்வனவற்றுக்கண் தாமும் விளையாடுதற்கண்ணும் :
“கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி” (குறுந்80)
இதனுள், யாமஃதயர்கஞ் சேறும் என விளையாட்டுக்கூறினள்.
என்று இவற்றோடு பிறவும்—இக் கூறியவற்றின் கண்ணும் புதல்வற்கண்டு நனியுவப்பினும் கூற்று நிகழுமென்று கூறப்பட்ட இவ்வெட்டோடே பிற கூற்றுக்களும், கண்ணிய காமக்கிழத்தியர் மேன — இக் கருதப்பட்ட காமக்கிழத்தியரிடத்தன (எ. று)
கூற்றென்பது அதிகாரத்தான் வருவிக்க; ஒடுவென்றது உருபு; கண்ணுதல், ஒரு மனைத் தெருவின்கண் உரிமை பூண்டு இல்லற நிகழ்த்துவரென்று சிறப்புக்கருதுதல். ‘பிறவு’ மென்றதனால் தலைவனை என்னலந் தாவெனத் தொடுத்துக் கூறுவனவும், நின பரத்தைமையெல்லாம் நின் றலைவிக்கு உரைப்பலெனக் கூறுவனவுஞ், சேரிப்பரத்தையரொடு புலந்துரைப்பனவுந், தலைவி கூற்றோடொத்து வருவனவும் பிறவாறு வருவனவுங் கொள்க.
“தொடுத்தென் மகிழ்ந செல்லல் ………” வஞ்சி அன்னவென் நலந்தந்து சென்மே” (அகம். 396)
இது காமக்கிழத்தி என்னலந் தாவென்றது.
“உள்ளுதொறு நகுவேன் தோழி” (நற்றிணை - ௧௦௦)
இது, மனையோட்கு உரைப்பலென்றலின் நடுங்கினானென்றது. “கண்டேனின்மாயம்” என்னும் மருதக்கலியுள்,
“ஆராக் கவவின் ஒருத்தி ……… சீறடி தோயா இறுத்த தமையுமோ” (கலி. 90)
எனச், சேரிப் பரத்தையராற் புலந்து தலைவனோடு கூறியவாறு காண்க. இன்னும் இதனானே,
“நீளிரும் பொய்கை………” அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத் தாருந் தானையும் பற்றி ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற் றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள்போற் பரந்து வெளிப்படா தாகி வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.” (அகம் 276)
இதனுட் பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம் என்றமையிற் சேரிப்பரத்தையைப் புலந்து கூறுதன் முதலியனவுங் கொள்க, இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.